தனித்தனி சம்பவத்தில் 7 ஆம்னி பஸ்கள் அடுத்தடுத்து மோதல்
உளுந்தூர்பேட்டை அருகே தனித்தனி சம்பவத்தில் 7 ஆம்னி பஸ்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உளுந்தூர்பேட்டை,
திருச்சியில் இருந்து 36 பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் ஆம்னி பஸ் ஒன்று சென்னை நோக்கி புறப்பட்டது. உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் உள்ள பு.மாம்பாக்கம் என்ற இடத்தின் அருகே வந்த போது, முன்னால் சென்ற லாரி மீது மோதாமல் இருப்பதற்காக, ஆம்னி பஸ் டிரைவர் திடீரென பிரேக் பிடித்தார்.
அப்போது பின்னால் சென்னை நோக்கி வந்த மேலும் 3 ஆம்னி பஸ்கள், இந்த ஆம்னி பஸ்சின் பின்புறம் மோதியதுடன் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து மோதிக் கொண்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஆம்னி பஸ்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்துக்குள்ளான ஆம்னி பஸ்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை நெரிசலை ஒழுங்குபடுத்தினர். இந்த விபத்தால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல் சென்னையில் இருந்து மதுரை நோக்கி ஆம்னி பஸ் வந்து கொண்டிருந்தது. உளுந்தூர்பேட்டை அருகே பரிக்கல் என்ற இடத்தில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பிரேக் பிடித்தார். அப்போது அந்த பஸ்சுக்கு பின்னால் வந்த 2 ஆம்னி பஸ்கள் ஒன்றுடன் ஒன்று அடுத்தடுத்து மோதி நின்றன. இதுபற்றி அறிந்த திருவாலூர் போலீசார் விரைந்து வந்து, விபத்துக்குள்ளான பஸ்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.
Related Tags :
Next Story