ரெயில் போக்குவரத்து மாற்றம், ரத்து தகவல் தெரிவிக்காததால் குழப்பம்


ரெயில் போக்குவரத்து மாற்றம், ரத்து தகவல் தெரிவிக்காததால் குழப்பம்
x
தினத்தந்தி 18 Aug 2018 3:48 AM IST (Updated: 18 Aug 2018 3:48 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே நிர்வாகம் ரெயில் போக்குவரத்து மாற்றம், ரெயில்கள் ரத்து குறித்த விவரங்களை தொடர்புடைய ரெயில் நிலைய அலுவலர்களுக்கு உரிய நேரத்தில் தெரிவிக்காததால் பயணிகளுக்கு தேவையில்லாத சிரமம் ஏற்படுகிறது.

விருதுநகர், 


தென்னக ரெயில்வே நிர்வாகம் பல்வேறு காரணங்களுக்காக ரெயில் நேரம் மற்றும் வழித்தடங்களை மாற்றுதல், குறிப்பிட்ட ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் போக்குவரத்தை ரத்து செய்தல் ஆகியவற்றை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதுகுறித்து தென்னக ரெயில்வே நிர்வாகமும், சம்பந்தப்பட்ட ரெயில்வே கோட்ட நிர்வாகமும் அறிவிப்புகளை வெளியிடுகிறது. இந்த அறிவிப்புகள் பல நேரங்களில் தாமதமாக வெளியிடப்படுவதால் சம்பந்தப்பட்ட ரெயில்களில் பயணம் செய்யும் பொதுமக்களை சென்று அடைவதில்லை.

இதேபோன்று தொடர்புடைய ரெயில்நிலைய அலுவலர்களுக்கும் ரெயில் போக்குவரத்தில் செய்துள்ள மாற்றங்கள் குறித்து உரிய காலத்தில் தகவல் அனுப்பாத நிலை தொடர்கிறது. இதனால் சம்பந்தப்பட்ட ரெயில்நிலைய அலுவலர்களுக்கு இந்த மாற்றங்கள் குறித்து ரெயில் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் தான் தெரியவரும் நிலை உள்ளது.

இப்பிரச்சினையால் ரெயில் பயணிகளுக்கு தேவையற்ற சிரமம் ஏற்படுவதுடன் அவர்கள் தாங்கள் சென்றடைய வேண்டிய ஊருக்கு மாற்று ஏற்பாடு செய்ய முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. தாம்பரம்-நெல்லை இடையேயான அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் 3 தினங்களுக்கு முன்னர் விருதுநகரில் நிறுத்தப்பட்டது. ரெயில்பாதை பராமரிப்பு பணிக்காக விருதுநகர்-நெல்லை இடையேயான ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

ஆனால் இந்த மாற்றம் குறித்து தகவல் தெரியாத தாம்பரம் ரெயில் நிலைய அலுவலர்கள் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு தாம்பரத்தில் இருந்து நெல்லை வரை பயணசீட்டு வழங்கி உள்ளனர். விருதுநகர் ரெயில் நிலையத்தில் இந்த ரெயில் நிறுத்தப்பட்ட பின்னரும் எதற்காக நிறுத்தப்பட்டது என்பதை ரெயிலில் வந்த பயணிகளுக்கு விருதுநகர் ரெயில் நிலைய அதிகாரிகளால் உடனடியாக தெரிவிக்க முடியவில்லை.

இதனால் அந்த ரெயிலில் நெல்லைக்கு செல்ல வேண்டிய பயணிகள் மாற்று ஏற்பாடு செய்வதற்கு மிகுந்த அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டு விட்டது.

இந்த பிரச்சினை குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, ரெயில்வே நிர்வாகம் ரெயில் போக்குவரத்து செய்யும் மாற்றங்கள் குறித்து சம்பந்தப்பட்ட ரெயில் நிலையங்களுக்கு குறித்த காலத்தில் வழக்கமாகவே தகவல் தெரிவிப்பது இல்லை என கூறியதுடன், இதில் ரெயில்வே நிர்வாகம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித் தார்.

எனவே ரெயில் பயணிகளுக்கு ஏற்படும் தேவையற்ற சிரமங்களை தவிர்க்க ரெயில்வே நிர்வாகம் போக்குவரத்தில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து சம்பந்தப்பட்ட ரெயில் நிலைய அலுவலர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிப்பதுடன், குறிப்பிட்ட ரெயில் புறப்படுவதற்கு முன்னரே அந்த ரெயில் போக்குவரத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ரெயில் நிலையத்தில் அறிவிப்பு செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. 

Next Story