உறவினர்களுடன் தறித்தொழிலாளி தர்ணா போராட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


உறவினர்களுடன் தறித்தொழிலாளி தர்ணா போராட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 18 Aug 2018 3:59 AM IST (Updated: 18 Aug 2018 3:59 AM IST)
t-max-icont-min-icon

மின் இணைப்பு வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்வதாக கூறி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்களுடன் தறித்தொழிலாளி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

சேலம்,

ஓமலூர் அருகே மூங்கில்பாடி கிராமம் நல்லப்பன் காடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). தறித்தொழிலாளி. இவர், நேற்று காலை சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு உறவினர்களுடன் வந்தார். பின்னர், அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கயிறு திரிக்கும் தொழில் தொடங்குவதற்கு மின் இணைப்பு கேட்டு கருப்பூர் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளேன் என்றும், ஆனால் மின் இணைப்பு வழங்காமல் அலைக்கழிப்பு செய்யப்படுவதாகவும், மின் இணைப்பு வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும் ஆறுமுகம் புகார் தெரிவித்தார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து தர்ணாவில் ஈடுபட்ட ஆறுமுகத்திடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, போலீசாரிடம் ஆறுமுகம் கூறும்போது, எனக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் சொந்த தொழில் செய்ய வேண்டும் என நினைத்து கயிறு திரிக்கும் தொழில் நடத்துவதற்காக கருப்பூர் மின்வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு கேட்டு மனு கொடுத்தேன். 6 மாதங்கள் ஆகியும் மின் இணைப்பு கோரிய மனுவிற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தேன்.

இதையடுத்து மின் ஊழியர்கள் மின் இணைப்புக்காக அளவீடு செய்தனர். அதன் பிறகு பல நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை 50 முறையாவது கருப்பூர் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றிருப்பேன். இது குறித்து அதிகாரிகள் மற்றும் மின் வாரிய ஊழியர்களை அணுகி கேட்டபோது மின் இணைப்பு வழங்க லஞ்சம் கேட்கிறார்கள். லஞ்சம் கொடுக்கும் அளவிற்கு எங்களிடம் பணம் இல்லை. இதனால் மனமுடைந்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க உறவினர்களுடன் வந்துள்ளேன் என்றார்.

நேற்று அரசு விடுமுறை என்பதால் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் யாரும் கலெக்டர் அலுவலகத்தில் இல்லை. இதையடுத்து மின் இணைப்பு வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆறுமுகம் மற்றும் அவரது உறவினர்களிடம் போலீசார் தெரிவித்தனர். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். விடுமுறை நாளில் மின் இணைப்பு வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக கூறி உறவினர்களுடன் தறி தொழிலாளி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story