வருமான வரி வழக்கில் தடை உத்தரவின் பயன் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு கிடையாது ஐகோர்ட்டு உத்தரவு


வருமான வரி வழக்கில் தடை உத்தரவின் பயன் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு கிடையாது ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 18 Aug 2018 5:00 AM IST (Updated: 18 Aug 2018 4:38 AM IST)
t-max-icont-min-icon

வருமான வரி வழக்கில் தடை உத்தரவின் பயன் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு கிடைக்காது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

பெங்களூரு, 

வருமான வரி வழக்கில் தடை உத்தரவின் பயன் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு கிடைக்காது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இடைக்கால தடை

உயர்கல்வி மற்றும் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருப்பவர் டி.கே.சிவக்குமார். காங்கிரசின் பலமான தலைவர்களில் ஒருவரான அவருடைய வீடு, அலுவலகங்கள், நண்பர்களின் வீடுகள், உறவினர்களின் வீடுகளில் பெரிய அளவில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது டி.கே.சிவக்குமாரின் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.8.59 கோடி சிக்கியது. இதுகுறித்து வருமான வரித்துறை, டி.கே.சிவக்குமார் உள்பட 4 பேர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணை பெங்களூரு பொருளாதார குற்ற சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சச்சின் நாராயண் என்பவர் ஐகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதன்பேரில் அவர் மீதான கோர்ட்டு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி வீரப்பா கடந்த ஜூலை மாதம் 30-ந் தேதி உத்தரவிட்டார்.

ஐகோர்ட்டு உத்தரவு

ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட வழக்கில் தொடர்புடைய தங்களுக்கும் பொருந்தும் என்று மற்றவர்கள் கூறினர். இதுகுறித்து ஐகோர்ட்டை நாடிய வருமான வரித்துறை அந்த உத்தரவு குறித்து சில விவரங்களை கேட்டது. அதன்படி நீதிபதி வீரப்பா, இடைக்கால தடை உத்தரவு சச்சின் நாராயணுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட மற்றவர்களுக்கு அந்த உத்தரவின் பயன் கிடைக்காது என்றும் உத்தரவில் திருத்தம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இதனால் மந்திரி டி.கே.சிவக்குமார் மீதான வரி ஏய்ப்பு விசாரணை தொடர்ந்து நடைபெறும்.

Next Story