கேரள போலீஸ்-தமிழக அதிகாரி வாக்குவாதம் ; வாட்ஸ்-அப்பில் உலா வந்த தகவலால் சர்ச்சை
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரள பகுதிக்கு உபரிநீர் திறப்பது தொடர்பாக தமிழக அதிகாரியுடன் கேரள போலீஸ் அதிகாரி ஒருவர் வாக்குவாதம் செய்துள்ளார். இதில், தமிழக அதிகாரி உதவி கேட்பது போன்ற தகவல் வாட்ஸ்-அப்பில் பரவியதால் அது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தேனி,
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியதை தொடர்ந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு போக, நீர்வரத்துக்கு ஏற்ப கேரள மாநிலம் வண்டிப்பெரியார் வழியாக இடுக்கி அணைக்கு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று வினாடிக்கு சுமார் 23 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இந்த நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் பணியாற்றும் தமிழக பொதுப்பணித்துறை உதவி கோட்டபொறியாளர் சாம் இர்வினுடன், அணையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள கேரள போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சலீம் என்பவர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக வாக்குவாதம் செய்துள்ளார்.
அணையில் தண்ணீரை தேக்கி வைக்காமல் கேரளாவுக்கு கூடுதல் உபரிநீர் திறந்து விட வேண்டும் என்று அந்த போலீஸ் அதிகாரி, உதவி கோட்ட பொறியாளர் சாம் இர்வினுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்கு சாம் இர்வின் தண்ணீர் வரத்துக்கு ஏற்ப தான் உபரிநீர் வெளியேற்றப்படும் என்றும், இதுகுறித்து உத்தரவிட பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு அதிகாரம் கிடையாது என்றும் கூறியதாக தெரிகிறது.
இதுகுறித்து அறிந்த அணையின் செயற்பொறியாளர் சுப்பிரமணியம், தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், இடுக்கி மாவட்ட கலெக்டர் ஜீவன்பாபு, இடுக்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுப்பதாக இடுக்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உறுதி அளித்துள்ளார்.
இதற்கிடையே உதவி கோட்ட பொறியாளர் இந்த பிரச்சினை குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுவது போன்ற தகவல், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது. இது, அணை விவகாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து செயற்பொறியாளர் சுப்பிரமணியத்திடம் கேட்ட போது, ‘உபரிநீரை அதிகம் திறக்குமாறு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கூறி வாக்குவாதம் செய்துள்ளார். இதை உதவி கோட்ட பொறியாளர் யாருக்கோ தகவல் கொடுக்கப்போய், அது சமூக வலைத்தளங்கள் வரை பரவி விட்டது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக நான் தேனி, இடுக்கி மாவட்ட கலெக்டர்களிடமும், இடுக்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடமும் பேசினேன். அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். இப்போது எந்த பிரச்சினையும் இல்லை. அணையில் வழக்கம் போல் பணிகள் நடந்து வருகின்றன’ என்றார்.
Related Tags :
Next Story