பாலங்களில் போக்குவரத்துக்கு தடை காவிரியில் வெள்ளப்பெருக்கு: கரைபுரண்டு ஓடும் தண்ணீர்


பாலங்களில் போக்குவரத்துக்கு தடை காவிரியில் வெள்ளப்பெருக்கு: கரைபுரண்டு ஓடும் தண்ணீர்
x
தினத்தந்தி 17 Aug 2018 11:27 PM GMT (Updated: 17 Aug 2018 11:27 PM GMT)

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் பாலங்களில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டது.

ஈரோடு,

காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. நேற்று காவிரி ஆற்றுக்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரும், பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரும் சேர்ந்து சுமார் 2¼ லட்சம் கன அடி தண்ணீர் வினாடிக்கு சென்றது. இதனால் வெள்ளம் காவிரியில் கரைபுரண்டோடியது. பல ஆண்டுகளுக்கு பின்னர் காவிரியில் பாய்ந்து வரும் தண்ணீர் கரையோரங்களில் இருந்த மரங்களையும் பெயர்த்துக்கொண்டு சென்றது. கருங்கல்பாளையம் காவிரி ஆறு பிரமாண்டமாக பாய்ந்து சென்றது. இதில் கருங்கல்பாளையம் ஆற்றின் கரையோரம் இருந்த பல வீடுகளில் வெள்ளம் புகுந்தது. மேலும் ஆற்றின் கரையில் இருந்த கோவில் வெள்ளத்தில் மூழ்கியது.

இங்குள்ள பழைய பாலத்தை இடித்துக்கொண்டு வெள்ளம் சென்றது. ஆற்றில் ஆங்காங்கே தேங்கி இருந்த ஆகாயத்தாமரைகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. தென்னை மரங்கள், வாழை மரங்கள் உள்பட பல மரங்களும் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டன. ஆற்றின் குறுக்கே உள்ள பழைய பாலத்தை தொட்டு தண்ணீர் பொங்கி ஓடியதால் பாலத்தில் போக்குவரத்துக்கு 2-வது நாளாக நேற்றும் போலீசார் தடை விதித்து இருந்தனர்.

தண்ணீர் பொங்கி நுங்கும் நுரையுமாக செல்வதை பார்க்க ஈரோடு மற்றும் பள்ளிப்பாளையம் பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கூடி வந்தனர். இதனால் புதிய பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் ஆட்டோவில் ஒலிபெருக்கிகள் வைத்து பொதுமக்களை எச்சரிக்கை செய்தனர். தண்ணீர் செல்லும் வேகத்தையும், அது பரந்து விரிந்து செல்லும் அழகினையும் பொதுமக்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்தனர். பலர் குடும்பம் குடும்பமாக வந்து குழந்தைகளுக்கும் காவிரியில் பொங்கி ஓடும் தண்ணீரை காட்டினார்கள்.

இதுபற்றி திருநகர்காலனி பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் கூறும்போது, ‘இதற்கு முன்பு 1971-ம் ஆண்டு மிகப்பெரிய அளவில் காவிரியில் வெள்ளம் வந்தது. அப்போது தண்ணீரில் காட்டு விலங்குகள் கூட அடித்துச்செல்லப்படுவதை பார்த்தோம். அதற்கு பின்னர் 2004-ம் ஆண்டு இந்த பாலத்தை தொடும் அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது எங்கும் மழை பெய்து ஈரோடு மாவட்டமே வெள்ளக்காடாக இருந்தது. ஆனால் முதல் முறையாக ஈரோடு மாவட்டத்தில் சிறு அளவுக்கு கூட மழை இல்லாத நிலையிலும் காவிரி ஆற்றில் வெள்ளம் செல்வது ஆச்சரியப்படுத்துகிறது. இந்த நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து வாய்க்காலுக்கு திறக்கப்படும் தண்ணீரை அனைத்து வயல்வெளி மதகுகளையும் திறந்து நிலத்தில் பாயச்செய்ய வேண்டும். அப்படி செய்தால் நிலத்தடி நீர் செறிவுறவும், ஏரி குளங்கள் நிரம்பவும் வாய்ப்பாக இருக்கும். தண்ணீரும் சேமிக்கப்படும்’ என்றார்.

ஈரோடு காவிரி ஆற்றின் அக்கரையில் பகுதியில் நேற்று மேலும் சில வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. நேற்று முன்தினம் இரவே தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் இருந்து பொருட்களை மீட்டு தங்கள் வீட்டு மாடிகளுக்கு கொண்டு சென்று அங்கேயே உட்கார்ந்து கொண்டனர். மாடி வசதி இல்லாத வீடுகளை சேர்ந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தங்கள் பொருட்களை கொண்டு சென்றனர். நேற்றும் பலர் தங்கள் வீடுகளில் இருந்து இரும்பு அலமாரிகள், துணிகள், உணவுப்பொருட்களை பத்திரமாக எடுத்து வெளியே கொண்டு சென்றனர். பலரும் வீடுகளின் மாடிகளில் இருந்து காவிரியில் பொங்கி ஓடும் வெள்ளத்தை பார்த்துக்கொண்டு இருந்தனர்.

இதுபோல் வெண்டிபாளையம் பகுதியிலும் காவிரியில் பொங்கி வரும் வெள்ளத்தை காண ஏராளமான பொதுமக்கள் வந்தார்கள். ஆனால் பாலத்துக்கு செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை.

லக்காபுரத்தில் இருந்து கொக்கராயன்பேட்டை செல்லும் பாலத்தை முழுமையாக தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பாலத்தின் இடைவெளிகளின் வழியாக தண்ணீர் நீரூற்றாக பீய்ச்சி அடித்துக்கொண்டே இருந்தது. இதனால் அந்த பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டதுடன், பொதுமக்கள் நடந்து செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது.

ஈரோட்டை அடுத்து உள்ள சாவடிப்பாளையம் காங்கேயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவில் பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அலையடித்துக்கொண்டு ஓடும் காவிரியின் நடுவில் ஒரு தீவு போன்று நட்டாற்றீஸ்வரர் கோவில் காட்சி அளிக்கிறது. 4 பக்கங்களும் தண்ணீரால் சூழப்பட்டு ஒற்றை கோவிலாக நட்டாற்றீஸ்வரர் கோவில் காவிரியின் நடுவில் தெரிவதை பார்க்க ஏராளமானவர்கள் வந்து சென்றனர். நீண்ட காலத்துக்கு பின்னர் இப்படி கோவிலை முற்றிலும் வெள்ளம் சூழ்ந்து செல்வதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

பவானி கூடுதுறையில் இருந்து பவானியும், காவிரியும் இணைந்து பெரும் வெள்ளக்காடாக காவிரி ஓடுகிறது பெருமாள் மலையில் இருந்து பார்த்தால், ஊராட்சிக்கோட்டை மலையையொட்டி பெரும் வெள்ளம் பரந்து விரிந்து ஓடுவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது. காவிரியின் அருகில் காலிங்கராயன் வாய்க்கால் சிறு ஓடைபோன்று செல்வதும், காவிரி ஈரோடு மாவட்டத்தையும், நாமக்கல் மாவட்டத்தையும் தொட்டுக்கொண்டு பரந்து விரிந்து ஓடுவதும் மனதை கொள்ளை கொள்ளும் அழகாக உள்ளது.

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதையொட்டி ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்ட பகுதியில் வருவாய்த்துறையினர், அந்தந்த உள்ளாட்சித்துறை அதிகாரிகள், தீயணைப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் உத்தரவின் பேரில் போலீசார் அனைத்து பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். ஆபத்தான பகுதிகளில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

Next Story