கவுந்தப்பாடியில் வெள்ளத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மீட்பு


கவுந்தப்பாடியில் வெள்ளத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மீட்பு
x
தினத்தந்தி 18 Aug 2018 5:10 AM IST (Updated: 18 Aug 2018 5:10 AM IST)
t-max-icont-min-icon

பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதால் கவுந்தப்பாடியில் வெள்ளத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மீட்கப்பட்டனர்.

பவானிசாகர்,

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்த மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

நேற்று முன்தினம் இரவு பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடிநீர் திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதனால் சத்தியமங்கலத்தில் உள்ள கொமராபாளையம், பாத்திமா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 60-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.

இந்த வெள்ளப்பெருக்கினால் சத்தியமங்கலத்தில் உள்ள ராஜீவ் நகர், ஆர்.எம்.பி. நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 7 மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. அந்தப்பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதால் இருளில் மூழ்கியது.

இதனால் மின்சாரமின்றி பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள். மேலும் சத்தியமங்கலத்தில் உள்ள பவானி ஆற்றின் கரையோரத்தில் இருந்த பவானீஸ்வரர் கோவிலின் ஒரு பக்க சுவர் முழுமையாக இடிந்து விழுந்துவிட்டது. பவானிசாகர் அருகே தொட்டம்பாளையம், அரியப்பம்பாளையம் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் பவானி ஆற்று வெள்ளம் புகுந்தது. அதுமட்டுமின்றி விவசாய தோட்டங்களிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்குள்ள கிணறுகள் மூழ்கின.

கவுந்தப்பாடியை அடுத்த பெருந்தலையூர் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் அந்தப்பகுதியில் உள்ள 50 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அப்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த வசந்தகுமார் (வயது 62), மணிமேகலை (50), ராமசாமி (86), ருக்மணி (78), பருவதராஜ் ஆகியோர் சிக்கிக்கொண்டனர். இதனை கவனித்த பொதுமக்கள் இதுகுறித்து கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், வெள்ளத்தில் சிக்கிய 5 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு கயிறு கட்டி, மிதவை உபகரணங்கள் மூலம் வெள்ளத்தில் சிக்கிய 5 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

இதேபோல் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கொடிவேரி அணை மூழ்கியபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பங்களாப்புதூர் அருகே உள்ள நஞ்சைபுளியம்பட்டி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் நேற்று முன்தினம் இரவு தண்ணீர் புகுந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள மக்களை அங்கு உள்ள பள்ளிக்கூடத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்தனர். மேலும் அவர்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் மருத்துவ வசதிகள் செய்துகொடுக்கப்பட்டது.

கண்காணிப்பு

நேற்று மாலை 3 மணி அளவில் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 58 ஆயிரத்து 333 கனஅடி நீர் வந்துகொண்டு இருந்தது. அணையின் நீர்மட்டம் 101.70 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரிநீராக 62 ஆயிரத்து 700 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் 2 ஆயிரத்து 700 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. ‘பவானி ஆற்றில் கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு 60 ஆயிரம் கனஅடிக்கு மேல் பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. தற்போது பவானிசாகர் அணை பொறியாளர் ராமகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் சிங்காரவடிவேலு ஆகியோர் தொடர்ந்து பவானிசாகர் அணையை கண்காணித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் பவானிசாகர் எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று சத்தியமங்கலத்தில் உள்ள பாத்திமா நகருக்கு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

மேலும், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அனைவருக்கும் தேவையான உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘வரலாறு காணாத வகையில் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமாக சத்தியமங்கலம், பவானிசாகர், நஞ்சைபுளியம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. வருவாய்த்துறை அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் துரிதகதியில் செயல்பட்டு வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்டு உள்ளனர். மேலும் வீடுகளை இழந்த பொதுமக்கள் அனைவருக்கும் வீட்டுவசதி வாரியம் சார்பில் இலவசமாக வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

அப்போது அவருடன், கோபி ஆர்.டி.ஓ. அசோகன், சத்தியமங்கலம் தாசில்தார் கிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் சுதா உள்பட பலர் இருந்தனர்.

ஆப்பக்கூடல் பவானி ரோட்டில் ஒரிச்சேரி பகுதியில் ½ கிலோ மீட்டர் துரத்திற்கு ஆற்று வெள்ளம் ரோட்டை கடந்து அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் புகுந்தது. அதனால் பவானியில் இருந்து ஆப்பக்கூடல் மற்றும் கவுந்தப்பாடி, கோபி, அத்தாணி ஆகிய பகுதிகளுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அந்தியூர் அருகே ஆப்பக்கூடல் பகுதியில் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தண்ணீர் விவசாய நிலங்கள் மற்றும் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த கரும்பு, நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் மூழ்கி நாசம் ஆனது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நேற்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் அந்தியூர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

Next Story