நித்திரவிளை பகுதியில் 3 நாட்களாக சாலைகளில் தேங்கி கிடக்கும் மழை வெள்ளம், பொதுமக்கள் அவதி


நித்திரவிளை பகுதியில் 3 நாட்களாக சாலைகளில் தேங்கி கிடக்கும் மழை வெள்ளம், பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 18 Aug 2018 7:30 AM IST (Updated: 18 Aug 2018 7:30 AM IST)
t-max-icont-min-icon

நித்திரவிளை பகுதியில் 3 நாட்களாக சாலைகளில் மழை வெள்ளம் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

நித்திரவிளை, 

குமரி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளில் இருந்து கடந்த 15-ந் தேதி அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனால் ஆறுகள், கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குழித்துறை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதில் பெரும்பாலான கிராமங்களில் தண்ணீர் வடிந்துள்ளது. ஆனால் நித்திரவிளை பகுதியில் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. நித்திரவிளையில் இருந்து புதுக்கடை, களியக்காவிளை செல்லும் சாலையில் ஏழுதேசம் பகுதியில் தண்ணீர் ஆறாக ஓடுகிறது. ஏழுதேசத்தில் இருந்து வைக்கலூர் செல்லும் சாலையில் 3 அடி அளவுக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது.

3 நாட்களாக இதே நிலை அந்த பகுதியில் நீடிப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்த தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தண்ணீர் தொடர்ந்து தேங்கி கிடப்பதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக அச்சம் அடைந்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், சாலைகளிலும், கரையோர பகுதிகளிலும் ஆற்று வெள்ளம் சூழ்ந்திருப்பதால் ஏதோ தீவு பகுதியில் வசிப்பதை போல் உணர்கிறோம். சாலைகளில் 3 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கியிருப்பதால் இருசக்கர வாகனங்களிலும் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மழை வெள்ளத்தை வெளியேற்ற உரிய நடவடிக்கை வேண்டும் என்றனர்.

Next Story