வாஜ்பாய் மறைவு: குமரி மாவட்டத்தில் கடைகள் அடைப்பு, பஸ்கள் மீது கல்வீசப்பட்டதால் பரபரப்பு
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி குமரி மாவட்டத்தில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் சில இடங்களில் பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்,
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று முன்தினம் மாலை மரணம் அடைந்தார். இதையொட்டி மத்திய, மாநில அரசுகள் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. தமிழக அரசு நேற்று ஒரு நாள் மாநிலம் முழுவதும் பொதுவிடுமுறை அறிவித்து இருந்தது. பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் நேற்று செயல்படவில்லை.
நாகர்கோவிலில் நேற்று கோட்டார், செட்டிகுளம் சந்திப்பு, மணிமேடை சந்திப்பு, கோர்ட்டு ரோடு, கேப் ரோடு, கே.பி.ரோடு, வெட்டூர்ணிமடம் சந்திப்பு, பார்வதிபுரம் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஒருசில இடங்களில் மட்டும் கடைகள் திறந்து இருந்தன.
இதேபோல் பஸ் போக்குவரத்தும் நேற்று காலையில் தாமதமாக தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு, தங்கலுக்கு செல்லக்கூடிய பஸ்கள் அனைத்தும் மீண்டும் டெப்போவுக்கு வரவழைக்கப்பட்டன. வழக்கமாக வடசேரி பஸ் நிலையத்தில இருந்து அதிகாலை 2 மணி முதல் தொலைதூர பஸ்கள் இயங்க தொடங்கும். நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கிராமப்புற பகுதிகளுக்கு 4.30 மணியில் இருந்து பஸ்கள் இயங்கும்.
ஆனால் நேற்று அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க காலை 7 மணிக்குப்பிறகே பஸ்கள் இயக்கப்பட்டன. வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து நெல்லை மார்க்கத்திலும், தக்கலை, மார்த்தாண்டம் மார்க்கத்திலும் செல்லக்கூடிய பஸ்கள் அனைத்தும் போலீஸ் ஜீப் முன்செல்ல 5 அல்லது 6 பஸ்கள் சேர்ந்தாற்போல் இயக்கப்பட்டன. இதனால் வடசேரி பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.
வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து திருச்செந்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, திருப்பூர், கோவை உள்ளிட்ட தொலைதூர பகுதிகள் அனைத்துக்கும் பஸ்கள் இயக்கப்பட்டன. நாகர்கோவில்- நெல்லைக்கு இயக்கப்படும் புதிய என்ட் டூ என்ட் பஸ்கள் இயக்கப்படவில்லை. அதேபோல் பிற வழித்தடங்களில் புதிய பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் என்ட் டூ என்ட் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கான டிக்கெட் கவுண்ட்டர்களில் ஆட்கள் யாருமின்றி வெறிச்சோடி கிடந்தன.
இதற்கிடையே மாவட்டத்தில் சில இடங்களில் பஸ்கள் மீது கல்வீசப்பட்டன. இந்த சம்பவத்தால் படிப்படியாக பஸ்களின் இயக்கம் குறைக்கப்பட்டது. பிற்பகல் 2 மணி முதல் மாலை வரை பஸ்கள் முழுமையாக நிறுத்தப்பட்டன. எனவே பஸ் நிலையங்களில் ஏராளமான பயணிகள் தங்களது ஊர்களுக்கு செல்ல முடியாமல் பரிதவித்தனர்.
நாகர்கோவில் நகரின் அருகாமை பகுதியைச் சேர்ந்த பயணிகள் ஆட்டோக்களைப்பிடித்து தங்களது வீடுகளுக்குச் சென்றனர். தொலைதூர பயணிகள் தங்களது ஊர்களுக்கு செல்ல முடியாமல் பஸ் நிலையத்திலேயே காத்துக்கிடந்தனர்.
அண்ணா பஸ் நிலையம் வழியாக கூடங்குளத்துக்கு சென்ற அணுமின்நிலைய பஸ்சில் கன்னியாகுமரி மார்க்கமாக செல்லக்கூடிய பயணிகளை போலீசார் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
கருங்கல் பஸ் நிலைய பகுதியில் நேற்று காலை 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தனர். அதில் பின்னால் இருந்த நபர் ஒருவர், ஐரேனிபுரம்-நாகர்கோவில் செல்லும் அரசு பஸ், குளச்சலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அரசு பஸ், மேல்மிடாலத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் அரசு பஸ் மீது அடுத்தடுத்து கல்வீசினார்.
இந்த கல்வீச்சு சம்பவம் கருங்கல் பஸ் நிலைய சுற்று வட்டார பகுதியில் நடந்தது. மோட்டார் சைக்கிளில் பயணித்தபடியே இருவர் கைவரிசையில் ஈடுபட்டு தப்பினர். கல் வீசியதால் அரசு பஸ்களின் கண்ணாடி உடைந்து சேதமானது. அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு ஏதும் காயம் ஏற்படவில்லை.
இதேபோல் பள்ளியாடி அருகே முருங்கைவிளையில் குளச்சலில் இருந்து மார்த்தாண்டம் செல்லும் அரசு பஸ் மீதும் கல்வீசப்பட்டது. இதில் அந்த பஸ்சின் கண்ணாடியும் சேதமடைந்தது. மேலும் நட்டாலம் அருகே மாமூட்டுக்கடையில் 2 ஆம்னி பஸ்கள் மீதும் தாக்குதல் சம்பவம் நடந்தது. மாவட்டம் முழுவதும் நேற்று 6 பஸ்கள் மீது கல்வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்த பஸ்கள் நிறுத்தப்பட்டன. பஸ்கள் மீது திடீரென கல்வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story