எட்டயபுரம் சந்தையில் ஆடுகள் விற்பனை மும்முரம்


எட்டயபுரம் சந்தையில் ஆடுகள் விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 19 Aug 2018 3:00 AM IST (Updated: 18 Aug 2018 10:54 PM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் சந்தையில் நேற்று ஆடுகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

எட்டயபுரம், 

எட்டயபுரம் சந்தையில் நேற்று ஆடுகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

ஆட்டுச்சந்தை

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள மைதானத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் அதிகாலை முதல் மதியம் வரையிலும் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு, கழுகுமலை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக முந்தின நாள் இரவிலேயே அழைத்து வந்து விடுவார்கள். ஆடுகளை வாங்குவதற்காக நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள், இறைச்சி கடைக்காரர்கள் அதிகாலையிலேயே வந்து ஆடுகளை மொத்தமாக வாங்கி செல்வார்கள்.

இங்கிருந்துதான் திருவனந்தபுரம், கொச்சி, கோவை போன்ற இடங்களில் உள்ள ராணுவ முகாம்களுக்கு இறைச்சிக்காக ஆடுகள் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் இங்கு தமிழக அரசின் இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தில் ஆடுகள் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

விற்பனை மும்முரம்

வருகிற 22–ந் தேதி (புதன்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்தே ஏராளமானவர்கள் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளை விற்பனைக்காக லாரி, லோடு ஆட்டோ போன்ற வாகனங்களில் கொண்டு வந்தனர். இதேபோன்று ஆடுகளை வாங்குவதற்காக பல்வேறு இடங்களில் இருந்தும் வியாபாரிகள், இறைச்சி கடைக்காரர்கள், பொதுமக்கள் திரளாக வந்தனர்.

தொடர்ந்து ஆடுகளின் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. ஆடுகளின் உடல் எடைக்கு ஏற்ப ரூ.3 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலும் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. வியாபாரிகள் பேரம் பேசி விலையை குறைத்து ஏராளமான ஆடுகளை கொள்முதல் செய்தனர். இதனால் வியாபாரம் களை கட்டியது. ஒரே நாளில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் ஆடுகள் கொள்முதல் செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story