தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எந்த நிலையிலும் திறக்க கூடாது எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் முகமது முபாரக் பேட்டி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எந்த நிலையிலும் திறக்க கூடாது என்று எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் முகமது முபாரக் கூறியுள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எந்த நிலையிலும் திறக்க கூடாது என்று எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் முகமது முபாரக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று மாலையில் தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;–
ஆலையை திறக்கக்கூடாதுதொடர் மழையால் கேரளா மிகப்பெரிய பேரழிவை சந்தித்து வருகிறது. அங்கு சுமார் ரூ.50 ஆயிரம் கோடிக்கு அதிகமான மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த 10 ஆயிரம் பேர் கேரளாவில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினையை பொருத்தவரை சில நாட்களுக்கு முன்பு உயர்நீதிமன்றம் 13 பேரை சுட்டு கொன்றதற்கான உத்தரவை தந்தது யார் என்று தமிழக அரசு மற்றும் காவல்துறையிடம் கேள்வி கேட்டு உள்ளது. அதோடு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட 6 பேரை விடுவித்து உள்ளது. தமிழக அரசு, 13 பேர் உயிர் இழப்புக்கு காரணமான காவல்துறை, வருவாய்த்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடியில் எந்த நிலையிலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கான நினைவேந்தல் பொதுக்கூட்டம் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தத்தில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணை தலைவர் தெகலான் பாகவி கலந்து கொண்டு பேசினார்.