நெல்லையில் இருந்து கேரளாவுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் கலெக்டர் ஷில்பா அனுப்பி வைத்தார்
நெல்லையில் இருந்து கேரளாவுக்கு வேன் மூலம் வெள்ள நிவாரண பொருட்களை கலெக்டர் ஷில்பா அனுப்பி வைத்தார்.
நெல்லை,
நெல்லையில் இருந்து கேரளாவுக்கு வேன் மூலம் வெள்ள நிவாரண பொருட்களை கலெக்டர் ஷில்பா அனுப்பி வைத்தார்.
வெள்ள நிவாரணம்கேரள மாநிலத்தில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக பல கிராமங்கள் பாதிக்கப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண பொருட்கள் சேமிக்க சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள சேமிப்பு கிட்டங்கியில் வெள்ள நிவாரண பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டன. அங்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட பல்வேறு நிவாரண பொருட்கள் பாதுகாப்பாக அட்டை பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டன. நேற்று அந்த பொருட்கள் வேனில் ஏற்றப்பட்டு கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கலெக்டர் அனுப்பி வைத்தார்அந்த வேனை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா அனுப்பி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:–
நெல்லை மாவட்டத்தில் உள்ள நிவாரண பொருட்களை நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு வந்து, பின்னர் கேரள மாநிலத்தில் தேவைப்படும் இடங்களுக்கு தேவையான பொருட்களை அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போது கேரள மாநிலத்திற்கு அதிகளவில் அரிசி, பிஸ்கட், மைதா, வேட்டி, சேலைகள், நைட்டி, லுங்கி, சட்டை மற்றும் உள்ளாடைகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான இதர துணி வகைகள், போர்வை, பாய் போன்றவை அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகிறது.
மருந்துகள்மேலும் மிக முக்கியமாக அதிகளவில் மாத்திரை வகைகளும், மருந்துகளும் தேவைப்படுகிறது. இவை அனைத்தும் தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். பிற மாவட்டங்களில் இருந்தும் நிவாரண பொருட்கள் இங்குள்ள சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்பட்டு பின்னர் தேவையான இடங்களுக்கு கொண்டு செல்லப்படும்.
வணிகர் சங்கம், அரிசி ஆலைகள், ரோட்டரி சங்கம், குவாரி சங்கம், மருத்துவ சங்கம், லயன்ஸ்கிளப், ரோட்டரி கிளப் போன்ற தன்னார்வ அமைப்புகள் நிவாரண பொருட்கள் வழங்க முன்வர வேண்டும். தற்போது நிவாரண பொருட்கள் அனைத்தும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் தேவையான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த நிவாரண பொருட்களை கொண்டு செல்லவும், பாதுகாக்கவும், சேகரிக்கவும் 10 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அனைத்து தரப்பு மக்களும் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், நெல்லை மாநகர் மாவட்ட அதி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், சேரன்மாதேவி உதவி கலெக்டர்ஆகாஷ், நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மாவட்ட கலெக்டரிடன் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், நெல்லை உதவி கலெக்டர் மைதிலி, மகளிர் திட்ட இயக்குனர் மைக்கேல் அந்தோனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆக்சிஜன் சிலிண்டர்கள்பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் இருந்து 30 ஆக்சிஜன் சிலிண்டர்கள் கேரள மாநிலத்துக்கு நேற்று லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சிலிண்டர்கள் திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.