ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் மீண்டும் எதிர்ப்பு பேச்சுவார்த்தை தோல்வி


ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் மீண்டும் எதிர்ப்பு பேச்சுவார்த்தை தோல்வி
x
தினத்தந்தி 19 Aug 2018 3:30 AM IST (Updated: 19 Aug 2018 12:20 AM IST)
t-max-icont-min-icon

அம்மாபாளையத்தில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க மீண்டும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆரணி தாசில்தார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அருகே அம்மாபாளையம் கிராமத்தின் வழியே செல்லும் ஆளில்லா ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில் பாதையின் குறுக்கே ரெயில்வே துறை சார்பில் சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால் சுரங்கப்பாதை அமைக்க கூடாது என்று அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சுரங்கப்பாதை அமைப்பதால் விவசாயம் பாதிக்கப்படும் என்று அவர்கள் கூறினர்.

இந்த நிலையில் நேற்று ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டது. ஆனால் மீண்டும் பொதுமக்கள் சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆரணி தாசில்தார் கிருஷ்ணசாமி, கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், வருவாய் ஆய்வாளர் சுபிச்சந்தர், கிராம நிர்வாக அலுவலர் பொற்கொடி மற்றும் ரெயில்வே துறை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து அதிகாரிகளும், பொதுமக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ரெயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story