கோவையில் இருசக்கர வாகனத்தில் வந்து குடிபோதையில் தகராறு செய்த வாலிபருக்கு நூதன தண்டனை


கோவையில் இருசக்கர வாகனத்தில் வந்து குடிபோதையில் தகராறு செய்த வாலிபருக்கு நூதன தண்டனை
x
தினத்தந்தி 19 Aug 2018 5:30 AM IST (Updated: 19 Aug 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் இருசக்கர வாகனத்தில் குடிபோதையில் வந்து போலீசாரிடம் தகராறு செய்த வாலிபர், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசாருக்கு 10 நாட்கள் உதவ வேண்டும் என்று நூதன தண்டனை வழங்கி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

கோவை,

கோவை ஆம்னி பஸ் நிலையம் அருகே ராதாகிருஷ்ணன் ரோடு சந்திப்பு பகுதியில் காட்டூர் போக்குவரத்து பிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ரிச்சர்ட் தலைமையிலான போலீசார் கடந்த மாதம் 28–ந் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர், ‘நான் யார் தெரியுமா?. நான் நீதிபதியின் உறவினர். உங்கள் பெயர் என்ன? வேலையை விட்டே தூக்கிவிடுவேன், சீருடையில் உள்ள பேட்ஜில் பெயரை காட்டுங்கள்’ என்று கூறிய போலீசாரிடம் தகராறு செய்தார்.

அதோடு முகநூலிலும் இந்த காட்சிகளை பதிவு செய்து விடுவேன் என்று கூறி மிரட்டினார். இதை வேடிக்கை பார்த்த பொதுமக்களில் சிலர் அந்த சம்பவத்தை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து சப்–இன்ஸ்பெக்டர் ரிச்சர்ட் ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கல்வீரம்பாளையத்தை சேர்ந்த சுதர்சன் (வயது 28), தனியார் நிறுவன ஊழியர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் சுதர்சன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அதைத்தொடர்ந்து போதை தெளிந்ததும் சுதர்சன் தான் செய்த தவறை உணர்ந்து போலீசாரை பாராட்டினார். ‘போக்குவரத்து போலீசார் இரவிலும், பகலிலும் சாலையில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகிறார்கள். அவர்களது பணி பாராட்டுக்குரியது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது தவறு. நான் சப்–இன்ஸ்பெக்டரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறும் காட்சியும் சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த நிலையில் கைதான சுதர்சன் ஜாமீன் கேட்டு கோவை 2–ம் எண் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட் டப்பட்ட சுதர்சனுக்கு நூதன தண்டனை கொடுத்து நிபந்தனை ஜாமீன் வழங்கி மாஜிஸ்திரேட்டு திருஞானசம்பந்தம் உத்தரவிட்டார்.

அந்த உத்தரவில், குற்றம் சாட்டப்பட்ட சுதர்சன் போலீசாருடன் தகராறு செய்த இடமான ஆம்னி பஸ்நிலையம் அருகே ராதாகிருஷ்ணன் ரோடு சந்திப்பில் போக்குவரத்து போலீசாருக்கு உதவியாக போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் 10 நாட்கள் உதவ வேண்டும். அவர், தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த பணியை அவர் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மாஜிஸ்திரேட்டு நூதன தண்டனை வழங்கி உத்தரவிட்டதை தொடர்ந்து சுதர்சன் நேற்று காலை முதல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசாருக்கு உதவியாக இருந்து வருகிறார். இதற்காக அவர் ஒளியை எதிரொலிக்கும் உடை (ரிப்ளக்டர் ஜாக்கெட்) அணிந்து போக்குவரத்து போலீசாருக்கு உதவி வருகிறார்.


Next Story