ஊத்துக்கோட்டை அருகே 2 பேர் கொலை பழிக்குப்பழி தீர்க்க கொலை செய்தோம் கோர்ட்டில் சரண் அடைந்த வாலிபர்கள் வாக்குமூலம்


ஊத்துக்கோட்டை அருகே 2 பேர் கொலை பழிக்குப்பழி தீர்க்க கொலை செய்தோம் கோர்ட்டில் சரண் அடைந்த வாலிபர்கள் வாக்குமூலம்
x
தினத்தந்தி 19 Aug 2018 4:00 AM IST (Updated: 19 Aug 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டை அருகே காட்டில் நடந்த இரட்டை கொலை வழக்கில் கோர்ட்டில் சரண் அடைந்த 6 பேர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை அருகே உள்ள செங்கரை பகுதியில் புகழ்பெற்ற காட்டு செல்லிஅம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பின்புறத்தில் உள்ள அடர்ந்த காட்டு பகுதியில் கடந்த 7-ந் தேதி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் 2 பேர் கிடந்தனர். கொலையாளிகளை பிடிக்க திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு 3 தனி போலீஸ் படைகளை அமைத்தார்.

இந்த தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் கொலையுண்டவர்கள் யார் என்பது தெரியவந்தது.

கோர்ட்டில் சரண்

காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் செல்லிஅம்மன்நகர் காந்தி தெருவை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (வயது 22) என்பதும், ஓட்டேரி அறிஞர் அண்ணா காலனி நேரு தெருவை சேர்ந்த சத்யா (22) என்பதும் தெரியவந்தது.

விக்னேஷ் மற்றும் சத்யா ஆகியோர் மீது காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் தலா 25-க்கும் மேற்பட்ட வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் பிரபல ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி சென்னை சைதாப்பேட்டை 11-வது கோர்டில் சென்னை அய்யப்பன்தாங்கலை சேர்ந்த வினோத் ( 26), மண்ணிவாக்கத்தை சேர்ந்த மணி (29), அருங்குன்றத்தை சேர்ந்த பிரகாஷ் (35), காவனூரை சேர்ந்த சக்திவேல் (19), பொழிச்சலூரை சேர்ந்த விக்னேஷ் (22), காட்டாங்கொளத்தூரை சேர்ந்த ரத்தினசபாபதி (24) ஆகியோர் சரண் அடைந்தனர்.

தலைமறைவாக இருந்தனர்

விக்னேஷ், சத்யாவை நாங்கள்தான் கொலை செய்தோம் என்று அவர்கள் நீதிபதியிடம் தெரிவித்தனர். இவர்களை ஊத்துக்கோட்டை போலீசார் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. சென்னை நெடுங்குன்றம் பகுதியில் பிரபல ரவுடியாக திகழ்பவர் சூர்யா. இவரது தம்பி உதயராஜ் (25), இவர் கடந்த மாதம் 25-ந்தேதி கொலை செய்யப்பட்டார். இவரை நரேஷ் என்ற ரவுடி கும்பல் தீர்த்து கட்டியதாக கூறப்படுகிறது.

இந்த கொலையில் விக்னேஷ் மற்றும் சத்யா ஆகியோர் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. உதயராஜ் கொலை நடந்த பிறகு விக்னேஷ், சத்யா ஆகியோர் செங்கரை பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் தலைமறைவாக இருந்தனர்.

பழிக்குப்பழியாக

இதை அறிந்த சூர்யா கோஷ்டியை சேர்ந்த கும்மிடிப்பூண்டி அருகே உள்ள எளாவூர் பகுதியை சேர்ந்த அன்பு என்பவருக்கு தெரிந்தது. இவர் விக்னேஷ், சத்தியாவிடம் நைசாகி பழகி இவர்களின் நடமாட்டத்தை சூர்யாவிடம் அவ்வப்போது தெரிவித்து வந்தார். 4-ந் தேதி இரவு செங்கரை காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த போது சூர்யா கோஷ்டியை சேர்ந்த சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்த வினோத், மணி, பிரகாஷ், சக்திவேல், விக்னேஷ், ரத்தினசபாபதி ஆகியோருக்கு தெரிந்தது. உடனே இவர்கள் செங்கரை காட்டுப்பகுதிக்கு வந்து பயங்கர ஆயுதங்களுடன் தாக்கியதில் விக்னேஷ், சத்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

உதயராஜ் கொலைக்கு பழிக்குப்பழி தீர்க்க இந்த கொலை செய்தோம் என்று 6 பேரும் வாக்குமூலம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் 6 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story