திருவண்ணாமலை குப்பை கிடங்கில் 18-வது நாளாக தொடர்ந்து எரியும் தீ


திருவண்ணாமலை குப்பை கிடங்கில் 18-வது நாளாக தொடர்ந்து எரியும் தீ
x
தினத்தந்தி 19 Aug 2018 4:00 AM IST (Updated: 19 Aug 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை நகராட்சி குப்பை கிடங்கில் தொடர்ந்து 18-வது நாளாக பற்றி எரியும் தீயினால் நச்சுப்புகை வெளியாகி வருகிறது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ஈசான்ய மயானம் அருகே நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இதன் அருகே ஏராளமான குடியிருப்புகளும், பள்ளியும் அமைந்துள்ளது. இந்த குப்பை கிடங்கில் கடந்த 1-ந் தேதி அதிகாலை திடீரென தீ பற்றியது. நகராட்சி மற்றும் தீயணைப்புத் துறையினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. கிடங்கில் ஏற்பட்ட தீயானது முற்றிலும் அணையாமல் அவ்வப்போது பற்றி எரிந்து வருகிறது.

இதனால் இரவு பகலாக வெளியேறும் நச்சுப்புகையில் சிக்கி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் தவித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

தொடர்ந்து குப்பை கிடங்கில் இருந்து புகை வருவதால் குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. கடந்த 18 நாட்களாக பற்றி எரியும் தீயை அணைக்க அதிகாரிகள் முழுவீச்சில் செயல்படவில்லை. இரவு நேரங்களில் பலத்த காற்று வீசுவதால் துர்நாற்றத்துடன் கூடிய புகை அதிகமாக வருகிறது. மேலும் அருகில் உள்ள சாலை முழுவதும் புகை சூழ்ந்து கொள்வதால் எதிரில் வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தீயை அணைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story