தாராபுரம் அருகே உப்பாறு அணைக்கு தண்ணீர் கிடைப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும் - உடுமலை கே.ராதாகிருஷ்ணன்
தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு தண்ணீர் கிடைப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.
திருப்பூர்,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் திருப்பூர் பகுதியில் நொய்யல் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் பாய்ந்து செல்கிறது. இந்த நிலையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நேற்று காலை ஆண்டிப்பாளையம் குளம், அணைப்பாளையம், தரைப்பாலம், ஈஸ்வரன் கோவில் பாலம் ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
ஆண்டிப்பாளையம் குளம் நிரம்பி உபரி நீர் நொய்யல் ஆற்றில் வினாடிக்கு 1,000 கன அடிக்கு மேல் செல்கிறது. சீராக தண்ணீர் செல்ல வேண்டும் என்பதற்காக நொய்யல் ஆற்றில் உள்ள பாலம், நீர்வழித்தடங்களில் உள்ள அடைப்புகள் அகற்றப்பட்டுள்ளன. திருப்பூர் மாநகர பகுதியில் ஆற்றங்கரையையொட்டி தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை தங்க வைப்பதற்காக மண்டபங்கள் தயார் நிலையில் உள்ளன. அவர்களுக்கு உணவு, தண்ணீர் வசதியும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் நேற்று வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. ஆற்றில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கல்லாபுரம் பகுதி பாலத்தை ஆய்வு செய்து தண்ணீர் சீராக செல்வதற்கு அங்கிருந்த அடைப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டது.
கொமரலிங்கம், கொழுமம், மடத்துக்குளம் பகுதியில் ஆற்றங்கரையோர மக்களுக்கு வருவாய்த்துறை மூலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை தங்க வைப்பதற்கு வசதியாக மண்டபங்கள், பள்ளிகள், தேவையான குடிநீர் வசதி, உணவு வசதிகள், மின்சார வசதி, மருத்துவ வசதி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தாலும் உடனடியாக வெளியேறும் வகையில் வடிகால் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் திறந்து விடுவது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வட்டமலைக்கரை அணைக்கு அமராவதி அணையில் அதிகப்படியான உபரி நீர் திறக்கும்போது செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து அதற்கான திட்டத்தை தயாரித்து வருகிறார்கள்.
திருமூர்த்தி அணையில் உள்ள உபரி நீரைத்தான் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திறக்க முடியும். திருமூர்த்தி அணையில் இருந்து ஏற்கனவே முதலாவது மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு நிறைவடைந்துள்ளது. 2–ம் மண்டலத்துக்கு வருகிற 23–ந்தேதி தண்ணீர் திறந்து விடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் அணையில் அதிக அளவு தண்ணீர் இருப்பதால் முன்கூட்டியே தண்ணீர் திறப்பதற்கான பணியை பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டுள்ளனர். பெரியப்பட்டி பகுதி வரை குளங்கள் நிரம்பி இருக்கிறது. அணையில் தண்ணீர் அதிகமாக இருப்பதால் உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று முதல்–அமைச்சரிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உப்பாறு அணைக்கு தண்ணீர் கிடைப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.