மருதுறையில் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு தரைப்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
மருதுறையில் நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
முத்தூர்,
திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள மருதுறையில் நொய்யல் ஆறு செல்கிறது. திருப்பூர்–ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ள இந்த நொய்யல் ஆற்றின் குறுக்கே ஒரு தாழ்வான தரைப்பாலம் உள்ளது. இந்த பாலத்தை கடந்து ஈரோடு மாவட்டம் சென்னிமலை, பெருந்துறை, அரச்சலூர் பகுதிக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் கோவை, நீலகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 1 வார காலமாக பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை வனப்பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக நொய்யல் ஆற்றில் அதிக மழை நீர் வெள்ளம் சென்று வருகிறது.
கோவையில் இருந்து நொய்யல் ஆற்றில் வரும் மழை நீர் திருப்பூர் வழியாக வந்து ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள ஒரத்துப்பாளையம் அணைக்கு வந்து சேர்கிறது. இந்த நிலையில் நொய்யல் ஆற்றில் திடீரென்று மழைநீர் வெள்ளம் அதிக அளவில் வருவதால் ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படாமல் அதிக அளவில் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதன்படி நேற்றுகாலை 8 மணிக்கு அணையில் இருந்து வினாடிக்கு 1,200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மாலை 4 மணிக்கு 1,600 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் நொய்யல் ஆற்றில் திருப்பூர் சாயக்கழிவு மற்றும் ஆற்றின் இருபுறமும் மாநகர, நகர, ஊராட்சி பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய் நீரும் சேர்ந்து அதிக அளவில் தண்ணீர் பாய்ந்து செல்கிறது.
இதனால் மருதுறையில் நொய்யல் ஆற்று தாழ்வான தரைப்பாலத்தை தொட்டபடி மழை நீர் வெள்ளம் கரைபுரண்டு பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் நொய்யல் நீர் பிடிப்பு பகுதியில் தற்போது வரை பலத்த மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் அதிக மழை நீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒரத்துப்பாளையம் அணையில் தேக்கி வைக்கப்படாமல் அப்படியே திறந்துவிட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக மருதுறை நொய்யல் ஆற்று தரைப்பாலத்தில் எப்போது வேண்டுமானாலும் மழை நீர் வெள்ளம் அதிக அளவில் பாலத்தின் மேலே செல்ல வாய்ப்புள்ளதால் நேற்று காலை முதல் இந்த பாலத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மருதுறை சுற்றுவட்டார கிராமப்பகுதி பொதுமக்கள் நொய்யல் ஆற்று வெள்ளப்பெருக்கை நேரில் சென்று ஆர்வமுடன் கண்டுகளித்தனர். மேலும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நொய்யல் ஆற்றில் செல்லும் தண்ணீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.
ஆனால் ஒரு சில கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த நொய்யல் ஆற்று தாழ்வான தரைப்பாலத்தின் மேலே வெள்ளப்பெருக்கு ஆபத்தை உணராமல் சென்று வருகின்றனர்.