மழையால் கேரள மக்கள் பாதிப்பு 25 டன் வெள்ள நிவாரண பொருட்கள் கலெக்டர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்
மழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு 25 டன் வெள்ள நிவாரண பொருட்களை கலெக்டர் பொன்னையா கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
காஞ்சீபுரம்,
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கான வெள்ள நிவாரண பொருட்களை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா கலெக்டர்் அலுவலக வளாகத்தில் இருந்து கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வெள்ள நிவாரண பொருட்களில் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான 10 ஆயிரம் எண்ணிக்கையில் பிஸ்கெட், ரூ.7½ லட்சம் மதிப்பிலான 15 டன் அரிசி, ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான 3 டன் பருப்பு வகைகள், ரூ.84 ஆயிரம் மதிப்பிலான 450 லிட்டர் எண்ணெய் வகைகள், ரூ.25 ஆயிரம் மதிப்பிலான 250 கிலோ சேமியா, ரூ.14,500 மதிப்பிலான 175 கிலோ ரவை, ரூ.9 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பிலான 4 ஆயிரத்து 500 கிலோ பால்பவுடர், ரூ.18 ஆயிரம் மதிப்பிலான 400 கிலோகிராம் கோதுமை மாவு, ரூ.3 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பிலான 2 டன் நூடுல்ஸ், பெட்சீட், மருந்துகள், இதர வாழ்வாதார பொருட்கள் உள்பட ரூ.31 லட்சத்து 44 ஆயிரத்து 500 மதிப்பிலான 25 டன் பொருட்கள் வெள்ள நிவாரண பொருட்களாக கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து உதவிகள்
மேலும் மாவட்ட நிர்வாகத்தால் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தொடர்ந்து செய்ய இயலும் உதவிகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி நூர்முகம்மது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார், வருவாய் கோட்ட அலுவலர் ராஜீ, உணவு பாதுகாப்பு அலுவலர் ராமகிருஷ்ணன், ரைஸ்மில் தலைவர் சுந்தரவதனம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story