தஞ்சையில் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டாலும் குளங்கள் வறண்டு காணப்படுகின்றன


தஞ்சையில் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டாலும் குளங்கள் வறண்டு காணப்படுகின்றன
x
தினத்தந்தி 18 Aug 2018 10:30 PM GMT (Updated: 18 Aug 2018 8:59 PM GMT)

தஞ்சையில் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டாலும் குளங்கள் வறண்டு காணப்படுகிறது. கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தஞ்சாவூர்,

வரலாற்று சிறப்புமிக்க தஞ்சையை முத்தரையர்கள், சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் என பல்வேறு மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். மன்னர்கள் காலத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், மழைநீரை சேமிக்கவும் தஞ்சையில் ஏரிகள், குளங்கள், அகழிகள் அமைக்கப்பட்டன. தஞ்சை நகரில் மட்டும் 50 குளங்கள் இருப்பதாக வருவாய்த்துறை பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் மன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்ட குளங்களாகும். இந்த குளங்களுக்கு தண்ணீர் வரவும், வெளியேறவும் முறையாக வாய்க்கால்கள் வெட்டப்பட்டு பராமரிக்கப்பட்டன. இதனால் தஞ்சை நகரில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருந்தது. கிணறுகளிலும் தண்ணீர் இருந்தது.

ஆனால் இன்றைக்கு பெரும் பாலான குளங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. குளங்களுக்கு தண்ணீர் செல்லக்கூடிய வாய்க்கால்களும் அடைக்கப்பட்டு, கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. போதிய அளவு மழை இல்லாத காரணத்தினால் கடந்த 7 ஆண்டுகளாக காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடி நடைபெறவில்லை. இந்த ஆண்டு கர்நாடகத்தில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் எல்லாம் நிரம்பியுள்ளன.

கர்நாடக அணைகளில் இருந்து உபரி தண்ணீர் அதிக அளவு காவிரியில் திறந்துவிடப்பட்டதால் மேட்டூர் அணை இந்த ஆண்டு மட்டும் 2 முறை நிரம்பியது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணைக்கால்வாயில் சீறி பாய்ந்து கொண்டிருக்கிறது. 7 ஆண்டுகளுக்கு பிறகு ஆறுகளில் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்வதை கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆறுகளில் கரைபுரண்டு தண்ணீர் சென்றாலும் தஞ்சை நகரில் உள்ள குளங்கள் எல்லாம் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகின்றன. கல்லணைக்கால்வாய், வடவாறு ஆகியவற்றில் இருந்து குளங்களுக்கு தண்ணீர் செல்வதற்கு வசதியாக வாய்க்கால்கள் இருந்தன. ஆனால் இந்த வாய்க்கால்கள் எல்லாம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் ஆறுகளில் இருந்து எந்த வழியாக குளத்திற்கு தண்ணீரை கொண்டு செல்வது என்று தெரியாமல் அதிகாரிகள் தவிக்கின்றனர்.

தஞ்சை சிவகங்கை பூங்காவில் உள்ள குளம் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இந்த குளத்தில் இருந்து தான் அய்யன்குளம், சாமந்தான் குளத்திற்கு தண்ணீர் செல்லும். இந்த குளங்களுக்கு செல்லக்கூடிய பாதையும் அடைக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் தஞ்சை மையப்பகுதியில் உள்ள அய்யன்குளம், சாமந்தான் குளம் ஆகியவையும் வறண்டு காணப்படுகிறது. ஆறுகளில் செல்லக்கூடிய தண்ணீரை குளங்களில் சேமித்து வைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் ஆறுகளில் இருந்து பிரிந்து செல்லும் கிளை வாய்க்கால்களில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. கிளை வாய்க்கால்களில் நாணல் வளர்ந்து எப்போதும் போல் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. கிளை வாய்க்கால்களிலும் தண்ணீர் திறந்துவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.

ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என போலீசார் ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவித்து வருகின்றனர். அதையும் மீறி இளைஞர்கள் பலர், பாலத்தில் இருந்து தண்ணீருக்குள் விழுவதும், அக்கரையில் இருந்து இக்கரைக்கு நீந்தி செல்வது போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி செயல்படும்போது சிலர், ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். எனவே உயிரிழப்பை தடுக்கும் வகையில் ஆற்றுப்பாலங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர்கள், ஆபத்தான பகுதியில் யாரும் குளித்தால் அவர்களை எச்சரித்து, வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர்.

Next Story