தலைவாசல் அருகே சரக்கு ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை


தலைவாசல் அருகே சரக்கு ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 19 Aug 2018 4:15 AM IST (Updated: 19 Aug 2018 2:41 AM IST)
t-max-icont-min-icon

தலைவாசல் அருகே சரக்கு ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். வீட்டில் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தலைவாசல்,

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது45). சரக்கு ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி ஆலயமணி. இவர்களுக்கு ராம்குமார், அருண்குமார் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ராம்குமார் 11-ம் வகுப்பும், அருண்குமார் 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

கடந்த 17-ந் தேதி திருநள்ளாறு கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆலயமணி தனது மகன்கள் மற்றும் உறவினர்களுடன் சென்றார். இதனால் கலியமூர்த்தி புத்தூரில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் தனியே தங்கி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை வெகுநேரமாகியும் கலியமூர்த்தி வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பக்கத்து தோட்டத்தை சேர்ந்த கங்கம்மாள் அவரது வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு கை, கழுத்து மற்றும் உடலில் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கலியமூர்த்தி நிர்வாண நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார். பின்னர் இது குறித்து கங்கம்மாள் தனது கணவர் கோவிந்தனிடம் கூறினார். அவரும் வந்து பார்த்து பின்னர் தலைவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்.கார்த்திக்குமார், தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் அங்கு மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்களும் வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவரது மனைவி, மகன்கள் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அவர்கள் கலியமூர்த்தியின் உடலைப் பார்த்து கதறி அழுதது உருக்கமாக இருந்தது.

கலியமூர்த்தி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம கும்பல் நள்ளிரவு வீடு புகுந்து அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து உள்ளனர். அவரது உடலில் கை, கழுத்து என 18 இடங்களில் வெட்டுக்காயம் உள்ளது. கொலை நடந்த நேரத்தில் தோட்டத்தில் மின்மோட்டார் இயங்கியதால் இந்த சம்பவம் வெளியே தெரியவில்லை.

இதைத்தொடர்ந்து கலியமூர்த்தியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தலைவாசல் போலீசார் வழக்குபதிவு செய்து கலியமூர்த்தி எதற்காக கொலை செய்யப்பட்டார்? நிலத்தகராறு காரணமா? தொழில் போட்டி காரணமா? அல்லது கள்ளக்காதல் விவகாரமா? என விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட கலியமூர்த்தி, அவரது மனைவி ஆலயமணி ஆகியோரின் செல்போன்களுக்கு வந்த அழைப்புகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வீட்டுக்குள் சரக்கு ஆட்டோ டிரைவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story