பெங்களூருவில் திருட்டு, கொள்ளையில் தொடர்புடைய 15 பேர் கைது ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மீட்பு
பெங்களூருவில் திருட்டு, கொள்ளையில் தொடர்புடைய 15 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மீட்கப்பட்டன.
பெங்களூரு,
பெங்களூருவில் திருட்டு, கொள்ளையில் தொடர்புடைய 15 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மீட்கப்பட்டன.
பெங்களூரு மேற்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
7 பேர் கைது
பெங்களூருவில் வீட்டில் தனியாக வசிக்கும் மூதாட்டிகளை மிரட்டி கொள்ளையடித்து வந்ததாக சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜ் (வயது 30), ரவிகுமார் (24), கங்காதர் (45), பசவராஜ் (19), கங்கராஜூ (25) ஆகியோரை வித்யாரண்யபுரா போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பிலான 750 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டன.
இதேபோல், வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்டு வந்ததாக பெங்களூரு அன்னேஸ்வரி ரோட்டில் வசித்து வந்த கார்த்திக் குமார் என்ற கார்த்திக் (28), ஜெகதீஷ் குமார் (34) ஆகியோரை வித்யாரண்யபுரா போலீசார் கைது செய்தனர். கைதான கார்த்திக் குமாரிடம் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான 1 கிலோ தங்க நகைகளும், ஜெகதீஷ் குமாரிடம் இருந்து தங்க நகைகள் மீட்கப்பட்டன.
ரூ.75 லட்சம் தங்க நகைகள் மீட்பு
மேலும், வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்டு வந்ததாக கே.ஆர்.புரத்தை சேர்ந்த ஸ்ரீபாத்ரி (28), குமார் (29), இன்னொரு குமார் (26) ஆகியோரை அம்ருதஹள்ளி போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்தும் தங்க நகைகள் மீட்கப்பட்டன.
இதேபோல் திருட்டில் ஈடுபட்டதாக ஈரண்ணா என்ற ஈரப்பா (29) என்பவரை சிக்கஜாலா போலீசாரும், தங்க சங்கிலி பறித்ததாக கோவிந்தபுராவை சேர்ந்த சையத் இம்ரான் (29) என்பவரை சம்பிகேஹள்ளி போலீசாரும் கைது செய்தனர். ஈரண்ணாவிடம் இருந்து ரூ.12.15 லட்சம் மதிப்பிலான 500 கிராம் தங்க நகைகளும், சையத் இம்ரானிடம் இருந்தும் தங்க நகைகள் மீட்கப்பட்டன.
வழிப்பறியில் ஈடுபட்டு தலகட்டபுரா மற்றும் ஆடுகோடி போலீசாரிடம் சிக்கிய யாசர் மற்றும் அஸ்லாம் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தோம். அப்போது அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், முகமது நூருல்லா (41) என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர்களிடம் இருந்தும் தங்க நகைகள் மீட்கப்பட்டன. கைதான 15 பேர்களிடம் இருந்து மொத்தம் ரூ.75 லட்சம் மதிப்பிலான 2.317 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story