மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ‘கேரளாவுக்கு அனைத்து தரப்பினரும் உதவுங்கள்’ முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வேண்டுகோள்


மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ‘கேரளாவுக்கு அனைத்து தரப்பினரும் உதவுங்கள்’ முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வேண்டுகோள்
x
தினத்தந்தி 19 Aug 2018 5:00 AM IST (Updated: 19 Aug 2018 3:11 AM IST)
t-max-icont-min-icon

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு தேவையான உதவியை அனைத்து தரப்பினரும் வழங்குமாறு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

மும்பை, 

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு தேவையான உதவியை அனைத்து தரப்பினரும் வழங்குமாறு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

மழை வெள்ள பாதிப்பு

கேரள மாநிலத்தில் கன மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களின் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து பல்வேறு மாநிலங்களும் கேரள அரசுக்கு உதவிகரம் நீட்டி வருகின்றன. இந்த நிலையில் மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருப்பதாவது:-

ரூ.20 கோடி உதவித்தொகை

வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட கேரள மக்களுக்காக மராட்டிய அரசு உடனடி நிவாரணமாக ரூ. 20 கோடியை ஒதுக்கியுள்ளது. மேலும் கேரளாவுக்கு தேவையான உதவிகளை செய்ய அரசு முன்வந்துள்ளது.

இதேபோல் பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் தங்களால் முடிந்த உதவியை கேரள மக்களுக்கு அளிக்கவேண்டும்.

மராட்டிய வீட்டுவசதி வர்த்தக சபை ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள உணவு பொட்டலங்களை வழங்க முன்வந்துள்ளது. இதேபோல் ராஜஸ்தானி வெல்பேர் அசோசியேஷன் மற்றும் ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பு தலா ரூ. 51 லட்சம் நிவாரண நிதி வழங்க முடிவு செய்துள்ளது.

கேரள மக்களுக்கு வழங்குவதற்காக 11 டன் உலர் உணவுகள் தயார் செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே கூறியதாவது:-

தேசிய பேரிடராக அறிவிக்கவேண்டும்

நாட்டில் உள்ள எந்த மாநிலம் ஆபத்தில் இருந்தாலும், மராட்டிய அரசு முன்வந்து உதவிகரம் நீட்டும். இன்று கோடிக்கணக்கான கேரள மக்கள் தங்கள் வசிப்பிடத்தை இழந்து ஆபத்தில் தவிக்கின்றனர்.

இந்த சமயத்தில் மராட்டிய அரசு பெரிய அண்ணன் ஸ்தானத்தில் அம்மாநிலத் தின் அனைத்து மீட்பு நடவடிக்கைகளுக்கும் உதவிகரம் நீட்டவேண்டும்.

மத்திய அரச உடனடியாக கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story