தாளவாடியில் வனச்சரக அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் சிக்கள்ளி கிராமத்தை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாளவாடி வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தாளவாடி,
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் சிக்கள்ளி கிராமம் உள்ளது. இங்கு 200–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. இந்த நிலையில் சிக்கள்ளி கிராமத்தை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு வந்து தாளவாடி வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனச்சரகர் சிவக்குமார் அங்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த 6 மாதங்களாக வனப்பகுதியில் இருந்து காட்டுப்பன்றி, யானைகள் அடிக்கடி வெளியேறி, அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து விளைபயிர்களை நாசப்படுத்தின. இதனால் எங்களால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வனவிலங்குகள் விளைநிலங்களில் புகுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’, என்றனர். அதற்கு வனச்சரகர் சிவக்குமார், ‘உங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கிறோம்’ என்றனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் மனு எழுதி கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.