பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சத்தியமங்கலத்தில் 50 வீடுகள் இடிந்து சேதம்
பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சத்தியமங்கலத்தில் 50 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன.
சத்தியமங்கலம்,
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 101 அடியை தாண்டியது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து உபரிநீரை திறந்துவிட மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் உத்தரவிட்டார். இதையடுத்து அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. கடந்த 16–ந் தேதி இரவு 8 மணி அளவில் அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 75 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் அணைக்கு வரும் நீர்வரத்து குறைய தொடங்கியதை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் இது வினாடிக்கு 62 ஆயிரத்து 700 கன அடியாக குறைத்து திறக்கப்பட்டது. நேற்று மாலை 5 மணி அளவில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரத்து 833 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து ஆற்றுக்கு வினாடிக்கு 27 ஆயிரத்து 700 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 100.78 அடியாக இருந்தது.
பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சத்தியமங்கலம், பவானிசாகர் பகுதிகளில் 250–க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் வீடுகளில் இருந்த பொதுமக்கள் ஏராளமானோர் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டு அருகில் உள்ள பள்ளிக்கூடங்கள், திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் சத்தியமங்கலம் பகுதியில் கோட்டுவீராம்பாளையம், ரங்கசமுத்திரம் ஆகிய பகுதிகளில் வெள்ளம் வடிய தொடங்கியது. இதைத்தொடர்ந்து பள்ளிக்கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்கி இருந்தவர்கள் ஆற்றின் கரையோரம் இருந்த தங்களுடைய வீடுகளை வந்து பார்த்தனர். அப்போது கோட்டுவீராம்பாளையம், ரங்கசமுத்திரம் பகுதியில் இருந்த 50–க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்து இருந்ததை கண்டு சோகம் அடைந்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், ‘தங்களுக்கு அரசின் சார்பில் புதிதாக வீடுகள் கட்டிக்கொடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.