குறைந்த விலைக்கு செல்போன் தருவதாக கல்லூரி மாணவரிடம் நூதன மோசடி மர்ம நபருக்கு வலைவீச்சு


குறைந்த விலைக்கு செல்போன் தருவதாக கல்லூரி மாணவரிடம் நூதன மோசடி மர்ம நபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 19 Aug 2018 4:00 AM IST (Updated: 19 Aug 2018 3:28 AM IST)
t-max-icont-min-icon

குறைந்த விலைக்கு செல்போன் தருவதாக கல்லூரி மாணவரிடம் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மும்பை, 

குறைந்த விலைக்கு செல்போன் தருவதாக கல்லூரி மாணவரிடம் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் தேடி வருகின்றனர்.

குறைந்த விலை செல்போன்

மும்பை அந்தேரியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவர் சம்பவத்தன்று ஆன்-லைனில் செல்போன் விற்பனை தொடர்பான விளம்பரம் ஒன்றை பார்த்தார். அந்த விளம்பரத்தில் விலை உயர்ந்த செல்போன் ஒன்று குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து மாணவர் அந்த விளம்பரத்தை போட்ட ஜெய்கிசான் என்பவரை தொடர்பு கொண்டார்.

அப்போது ஜெய்கிசான் தன்னை ராணுவ வீரர் என மாணவரிடம் அறிமுகம் செய்து கொண்டார். மேலும் கொலபாவில் உள்ள நேவிநகர் குடியிருப்பில் தங்கி இருப்பதாக கூறிய அவர் அங்கு வந்து பணத்தை கொடுத்துவிட்டு செல்போனை வாங்கி செல்லுமாறு கூறினார்.

பணம் மோசடி

எனவே கல்லூரி மாணவர் அங்கு சென்றார். அப்போது ஜெய்கிசான் வெளிஆட்கள் நேவிநகர் குடியிருப்பிற்குள் வரமுடியாது. எனவே பணத்தை ஆன்லைனில் அனுப்பினால் செல்போனை ஒருவரிடம் குடியிருப்பின் வாசலுக்கு கொடுத்து அனுப்புவதாக கூறினார். இதை நம்பிய மாணவர் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பினார். ஆனால் யாரும் அவரிடம் செல்போனை வந்து கொடுக்கவில்லை. எனவே மாணவர் குடியிருப்பு காவலாளியிடம் விசாரித்தார். அப்போது அந்த குடியிருப்பில் கடற்படையினர் மட்டுமே தங்கி இருப்பதும், ராணுவ வீரர்கள் யாரும் அங்கு இல்லை என்பதும் தெரியவந்தது.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறித்த மாணவர் சம்பவம் குறித்து அந்தேரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரிடம் நூதன மோசடியில் ஈடுபட்டவரை தேடி வருகின்றனர்.

Next Story