சவுடு மண் அள்ள அனுமதி பெற்று விட்டு தனியார் நிலத்தில் மணல் எடுப்பு நடவடிக்கை கோரி தாசில்தார் அலுவலகம் முற்றுகை


சவுடு மண் அள்ள அனுமதி பெற்று விட்டு தனியார் நிலத்தில் மணல் எடுப்பு நடவடிக்கை கோரி தாசில்தார் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 19 Aug 2018 5:15 AM IST (Updated: 19 Aug 2018 5:13 AM IST)
t-max-icont-min-icon

காரியாபட்டி அருகே கிழவனேரி கிராமத்தில் சவுடு மண் அள்ள அனுமதி பெற்று விட்டு மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாசில்தார் அலுவலகத்தை கிராமத்தினர் முற்றுகையிட்டனர்.

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே கிழவனேரி கிராமத்தில் உள்ள தனியார் நிலத்தில் சவுடு மண் அள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. செங்கல் தயாரிக்க இந்த மண் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சட்டவிரோதமாக அங்கு மணல் அள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.ம.மு.க. காரியாபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் தோப்பூர் கருப்புராஜா தலைமையில் கிழவனேரி, சொக்கம்பட்டி, ஆத்திகுளம், தோப்பூர் உள்பட 10–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காரியாபட்டி தாலுகா அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

கிழவனேரியில் மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்து தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு கோ‌ஷமிட்டனர். பின்னர் மண்டல துணை தாசில்தார் தனக்குமாரிடம் மனு அளித்தனர். இதில் அ.ம.மு.க. காரியாபட்டி பேரூர் செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய பேரவை செயலாளர் வெயில் கண்ணன், ஒன்றிய மாணவரணி செயலாளர் பந்தனேந்தல் ராமச்சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கோரிக்கை குறித்து கிராமத்தினர் கூறியதாவது:–

காரியாபட்டியில் மணல் திருட்டு கட்டுப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் திருச்சுழி பகுதியில் இருந்து மணல் எடுத்துவருவதும் குறைந்திருந்தது. இந்த நிலையில் புதிதாக தாசில்தார் நியமிக்கப்பட்ட ஒரு வார காலத்திற்குள் சவுடு மண் அள்ளும் இடங்களில் விதியை மீறி மணல் அள்ளப்பட்டு வருகிறது.

திருச்சுழி பகுதியில் சவுடு மண் அள்ள மதுரை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதனால் திருச்சுழி பகுதியில் சவுடுமண் அள்ளுவது நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே காரியாபட்டி பிசிண்டி, பாஞ்சார் பகுதிகளில் சவுடு மண் அனுமதி பெற்று மணல் அள்ளி வந்தனர் இதற்கு வடகரை கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களை நடத்தினர். இதன் விளைவாக மாவட்ட நிர்வாகம் சவுடு மண் குவாரி உரிமத்தை ரத்து செய்தது. இதேபோல இங்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.


Next Story