ஆபத்துக்கு உதவும் அதிரடி படை
நம் நாட்டில் முதன் முதலாக சிறப்பு ஆயுத பயிற்சி பெற்ற பெண் கமாண்டோ படை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படையில் 36 பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
அதிகபட்சமாக அசாம் மாநிலத்தில் இருந்து 13 பேரும், அருணாசல பிரதேசம், சிக்கிம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா 5 பேரும், மேகாலயாவில் இருந்து 4 பேரும் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு இந்தியாவை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டை சேர்ந்த பாதுகாப்பு நிபுணர்களும் பயிற்சி அளித்துள்ளனர். நெருக்கடியான சூழ்நிலையை கையாள்வது எப்படி? வெடிக்கும் பொருட்களை அப்புறப்படுத்துவது எப்படி? வி.ஐ.பி.க்களுக்கு பாதுகாப்பு வழங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன? ஆயுதங்களை பயன்படுத்தியும், ஆயுதங்கள் இல்லாமலும் ஆபத்து நேரங்களில் சமாளிப்பது எப்படி? எதிரிகள் தாக்கும்போது பதுங்கு குழியில் பதுங்கி எதிர் தாக்குதல் நடத்துவது எப்படி? என்பது உள்பட பல்வேறு கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
டெல்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்னாயக் முயற்சியில் இந்த கமாண்டோ படை உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமாக கமாண்டோ படைவீரர்களுக்கு வழங்கும் பயிற்சி மட்டுமின்றி பிரத்யேகமாக 15 மாதங்கள் விசேஷ பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்துக்கு எதிராக பெண்கள் துணிந்து போராடும் நோக்கத்தின் அடிப்படையில் இந்த படை உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப மக்கள் அதிகமாக கூடும் பகுதிகள், கட்டிடங்களில் தீவிரவாதிகள் மக்களை பணயக்கைதி களாக சிறைபிடித்தால் எப்படி மீட்பது? என்பது பற்றி விசேஷ பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பெண் கமாண்டோ படையினர் தெற்கு டெல்லி மற்றும் மத்திய டெல்லி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள். மேலும் இந்தியா கேட், செங்கோட்டை போன்ற முக்கிய பகுதிகளிலும் இவர்கள் சேவையாற்றுவார்கள்.
Related Tags :
Next Story