வீடுகளில் புகுந்த வெள்ளம் வடியவில்லை: 5–வது நாளாக வைக்கல்லூர், மரப்பாலம் பகுதி மக்கள் பரிதவிப்பு


வீடுகளில் புகுந்த வெள்ளம் வடியவில்லை: 5–வது நாளாக வைக்கல்லூர், மரப்பாலம் பகுதி மக்கள் பரிதவிப்பு
x
தினத்தந்தி 19 Aug 2018 11:00 PM GMT (Updated: 19 Aug 2018 4:28 PM GMT)

வைக்கல்லூர், மரப்பாலம் பகுதி வீடுகளில் புகுந்த வெள்ளம் வடியாததால், மீண்டும் வீடுகள் திரும்ப முடியாமல் மக்கள் பரிதவிக்கின்றனர். 5–வது நாளாக அவர்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள், வாழைகள் நாசமானது.

நித்திரவிளை,

குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்தது. மலையோர பகுதியில் பெய்த கனமழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது. இதையடுத்து பெருஞ்சாணி அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால் தாமிரபரணி, பரளியாறு, கோதையாறு போன்றவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர கிராமங்கள் மூழ்கின.

ஏழுதேசம் பேரூராட்சி, மங்காடு, வாவறை, முன்சிறை ஊராட்சிகளுக்கு உள்பட 50–க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்ததால் ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு முகாம்களில் தங்கினர்.

இந்தநிலையில், நேற்று மழையளவு சற்று குறைந்தது. இதனால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. அத்துடன், கிராமங்களை சூழ்ந்து நின்ற வெள்ளம் மெதுவாக வடிய தொடங்கியது.

மங்காடு, வாவறை போன்ற ஊராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் வெள்ளம் ஓரளவு வடிந்ததால், அந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் முகாம்களை விட்டு வெளியேறி தங்களின் வீடுகளுக்கு திரும்பின. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் சேறும், சகதி காடாக காட்சி அளித்தது. வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள் அனைத்தும் நாசமானது. அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் இழந்ததால் பொதுமக்கள் மிகுந்த சோகம் அடைந்துள்ளனர். அத்துடன், வீட்டை சுத்தம் செய்தல், பழுதடைந்த பொருட்களை சரி செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார இணைப்பும் சரி செய்யப்பட்டு வருகிறது.

வைக்கல்லூர், மரப்பாலம், பருத்திகடவு போன்ற பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் இன்னும் வெள்ளம் தேங்கியுள்ளது. இந்த பகுதிகளில் தேங்கும் மழைநீர் கால்வாய்கள் மூலம் தான் வடிந்து செல்லும். கால்வாய்கள் அனைத்தும் நிரம்பி பாய்வதால் வெள்ளம் வடிந்து செல்லவில்லை. பல வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் இன்னும் அப்படியே தேங்கி நிற்கிறது.  

இதனால், இந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் பரிதவிக்கின்றனர். இதனால் அவர்கள் 5–வது நாளாக முகாம்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். சமத்துவபுரத்தில் உள்ள சுனாமி பேரிடர் மறுவாழ்வு மையத்தில் 60 குடும்பங்கள் தங்கியுள்ளனர். இவர்களுக்கு உணவு போன்ற அடிப்படை தேவைகள் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்படுகிறது. மேலும் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மாமுகம், இஞ்சிபறம்பு பகுதிகளில் சாலைகள்,தெருக்கள் தண்ணீரில் மூழ்கி கிடப்பதால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. வைக்கல்லூர் பகுதி வயல்களில் புகுந்த தண்ணீர் வடிந்து செல்ல வழியில்லாமல் அப்படியே தேங்கியுள்ளது. இதனால், வாழை, நெல் போன்ற பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது.

Next Story