கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 1.62 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு
கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 1.62 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
மைசூரு,
கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 1.62 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
கே.ஆர்.எஸ், கபினி அணைகள்
காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு மாவட்டம் தலைக்காவிரி, கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் உள்ள கே.ஆர்.எஸ்(கிருஷ்ணராஜ சாகர்), மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் உள்ள கபினி அணைகள் முழுகொள்ளளவை எட்டின. இந்த 2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரியில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கடந்த 17-ந் தேதி கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 2.46 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேற்று முன்தினம் இரு அணைகளிலும் இருந்தும் 1.90 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
1.62 லட்சம் கனஅடி நீர் திறப்பு
இந்த நிலையில் நேற்று காலை நிலவரப்படி 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 94 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.
அதேப்போல கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 2,280 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் 2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 1½ லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிக்கப்பட்டது. அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 7 ஆயிரத்து கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் தமிழகத்திற்கு வினாடிக்கு 1.62 லட்சம் கனஅடி நீர் சென்று கொண்டு இருந்தது.
தொடர்ந்து அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story