நீலகிரி மாவட்ட விவசாயிகள் கால்நடை பராமரிப்புத்துறையின் திட்டங்களில் பயன்பெறலாம்


நீலகிரி மாவட்ட விவசாயிகள் கால்நடை பராமரிப்புத்துறையின் திட்டங்களில் பயன்பெறலாம்
x

நீலகிரி மாவட்ட விவசாயிகள் கால்நடை பராமரிப்புத்துறையின் திட்டங்களில் பயன்பெறலாம்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:–

2018–2019–ம் ஆண்டில் மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கீழ்க்கண்ட திட்டங்களை செயல்படுத்த பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் தீவன பயிர் பயிரிட விரும்பும் விவசாயிகள் குறைந்தது 2 கறவை பசுக்கள், எருமைகள் வைத்திருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 0.25 ஏக்கர்(25 சென்ட்) நீர்பாசன வசதியுடன் கூடிய சொந்த நிலம் தீவன பயிர் பயிரிட வைத்திருக்க வேண்டும். அதிகபட்சம் ஒரு விவசாயிக்கு 8 கறவை பசுக்கள், எருமைகளுக்கு ஒரு ஏக்கர் வரை மானியம் வழங்கப்படும்.

வேலிமசால் தீவன பயிர் வளர்க்க விரும்புவோர் குறைந்தபட்சம் 0.35 ஏக்கர்(35 சென்ட்) நீர்பாசன வசதியுடன் கூடிய சொந்த நிலம் தீவன பயிர் செய்ய வைத்திருக்க வேண்டும். அதிகபட்சம் ஒரு விவசாயிக்கு 8 கறவை பசுக்கள், எருமைகளுக்கு 1.4 ஏக்கர் வரை தீவன விதைகள் மானியமாக வழங்கப்படும். சொந்த நிலம் இல்லாத விவசாயிகள் 3 வருடங்கள் நீர்பாசன வசதியுடைய நிலத்தினை ஒப்பந்த அடிப்படையில் குத்தகைக்கு எடுத்துக்கொள்ளலாம். மேற்கண்ட இரண்டு திட்டங்களிலும் குறு, சிறு விவசாயிகள், ஆவின் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள்(குறிப்பாக எஸ்.சி., எஸ்.டி.) பயனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஹைட்ரோபோனிக் தீவன பயிர் செய்ய விரும்பும் பயனாளிகள் மின்சார வசதியுடன் 40 சதுர அடி நிலம் மற்றும் குறைந்தது 2 கறவை பசுக்கள், எருமைகள் அல்லது கருவுற்ற பசுக்கள், எருமைகள் வைத்திருக்க வேண்டும். ஹைட்ரோபோனிக் சாதனம் நிறுவ மொத்தம் ஆகும் செலவில் அரசு 75 சதவீதம் (ரூ.16 ஆயிரத்து 875) மானியமாக வழங்குகிறது. 25 சதவீத செலவை விவசாயிகள் பங்களிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும். மின்சாரத்தால் இயங்கும் தீவன புல் நறுக்கும் கருவி பெற விரும்புகிறவர்கள் அரை ஏக்கர் தீவன பயிரிட இடம் வைத்திருக்க வேண்டும்.

இந்த கருவி பெற விரும்பும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் 75 சதவீத மானியம் வழங்கப்படும். தீவன புல் நறுக்கும் கருவி சுய உதவிக்குழுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேற்கண்ட திட்டங்களில் பயன்பெறுவோர் ஏற்கனவே இந்த திட்டங்களில் பயன்பெறாத பயனாளிகளாக இருக்க வேண்டும். எனவே கால்நடை பராமரிப்புத்துறையின் திட்டங்களில் விண்ணப்பித்து விவசாயிகள் பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story