1,519 ஏரிகளில் செய்யப்பட்ட குடிமராமத்து பணி திட்டம் வெற்றி - எடப்பாடி பழனிசாமி பேட்டி
தமிழகம் முழுவதும் 1,519 ஏரிகளில் செய்யப்பட்ட குடிமராமத்து பணி திட்டம் வெற்றி பெற்று உள்ளது என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் பவானி, காவிரிக்கரையோரத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்ட முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–
தமிழ்நாட்டில் குடிமராமத்து பணிகள் சிறப்பாக நடந்தன. முதல் கட்டமாக 1,519 ஏரிகள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டன. இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட குடிமராமத்து பணி திட்டம் வெற்றிகரமாக நடந்தது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மேலும் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் ஏரிகள் குளங்களை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில் முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் நடைபெறும் இந்த தமிழக அரசு இந்த ஆண்டு 1,511 ஏரிகளை குடிமராமத்து பணி திட்டத்தின் கீழ் தூர்வார ரூ.328 கோடி நிதியை ஒதுக்கி உள்ளது. இந்த பணிகளை மேற்பார்வையிட 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு பணிகள் தற்போது நடந்து வருகின்றன. குடிமராமத்து பணியின் கீழ் ஏரிகள் தூர்வாரப்பட்டு, ஆழப்படுத்தப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டதால் மழைக்காலத்தில் பெய்யும் மழைநீர் சேகரிக்கப்படுகிறது. மேலும், நீர்வரத்து வாய்க்கால்கள் சுத்தப்படுத்தப்பட்டதாலும், உபரிநீர் வெளியேறும் வாய்க்கால்கள் சரிசெய்யப்பட்டு, மதகுகளும் சரிசெய்யப்பட்டதால் இந்த திட்டம் வெற்றிகரமான திட்டமாக செயல்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழகத்தை பொறுத்தவரை நம்முடைய நிலப்பகுதியானது சமவெளிப்பரப்பாக இருக்கிறது. இதனால் தடுப்பணைகள் கட்ட முடியாத சூழல் உள்ளது. முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆதனூர் குமாரமங்கலம் என்ற இடத்தில் ரூ.400 கோடியில் தடுப்பணை கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது அங்கு சில பட்டாதாரர்களிடம் பேசி ஒருமித்த கருத்து ஏற்பட்டு, நிலம் கையகப்படுத்தப்பட்டதும் தடுப்பணை கட்டும் பணி தொடங்கப்படும்.
தமிழ்நாட்டில் பருவகாலங்களில் பெய்யும் மழைநீரை முழுமையாக சேமித்து வைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதற்காக ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்களை கொண்ட ஒரு குழு 3 மாதத்துக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து இன்னும் ஒரு மாதத்தில் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க இருக்கிறார்கள். அவர்கள் சமர்ப்பித்த உடன் தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு மழைநீர் சேமிக்கப்படும்.
மேலும், தமிழ்நாட்டில் பெய்யும் மழைநீர் வீணாகக்கூடாது என்ற வகையில் தமிழ்நாடு முழுவதும் எங்கெல்லாம் மழை நீரை சேமிக்க முடியும் என்று ஆய்வு செய்து தடுப்பணைகள் கட்ட 3 ஆண்டு கால திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்க திட்டமிட்டு முதல் கட்டமாக இந்த ஆண்டு ரூ.292 கோடி ஒதுக்கப்பட்டு 62 தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடைபெற உள்ளன.
இவ்வாறு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஈரோடு –பள்ளிபாளையம் காவிரி ஆற்றுப்பாலத்தில் வைத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–
பவானி, குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் ஆற்று நீரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வீடுகள் வழங்கப்படும். படிப்படியாக இந்த பணிகள் நடைபெறும்.
உள்ளூர் ஆறுகளை இணைப்பது தொடர்பான திட்டத்துக்காக குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆய்வு அறிக்கை வந்த பின்னர் முழுமையாக அதுபற்றி தெரிவிக்கப்படும். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதிக்கு குடிநீர் வழங்க கூட்டுக்குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. சங்ககிரி பகுதிக்கும் இந்த திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்படும். ஈரோடு மக்களுக்கு ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வருகிறது.
அத்திக்கடவு– அவினாசி திட்டம் விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.