குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலைமறியல், போக்குவரத்து பாதிப்பு


குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலைமறியல், போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 20 Aug 2018 3:45 AM IST (Updated: 20 Aug 2018 4:11 AM IST)
t-max-icont-min-icon

பெருமாநல்லூர் அருகே குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெருமாநல்லூர்,

பெருமாநல்லூர் அருகே லட்சுமி கார்டன், ரங்கா கார்டன் பகுதியில் சுமார் 60 குடியிருப்புகளும், புது காலனியில் 25 குடியிருப்புகளும் உள்ளன. இந்த பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுபற்றி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட 100–க்கும் மேற்பட்டோர் நேற்று காலிக்குடங்களுடன் திரண்டு வந்து பெருமாநல்லூர்– மலையபாளையம் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த ஊராட்சி செயலர் தனபால் மற்றும் பெருமாநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, எங்கள் பகுதியில் போடப்பட்ட ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் உள்ளது. அதை ஆய்வு செய்து தண்ணீரை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றி, குடிநீர் சீராக வினியோகம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதுபற்றி வட்டார வளர்ச்சி அலுவலர் அரிகரனிடம் போலீசார் போனில் தகவல் கொடுத்தனர். அவர், நாளை(இன்று) ஆழ்குழாய்களை நேரில் ஆய்வு செய்து தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story