புனேயில் பரிதாபம் 2 மகன்களை கொன்று தந்தை தற்கொலை
புனேயில் 2 மகன்களை கொன்று தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
புனே, ஆக.20-
புனேயில் 2 மகன்களை கொன்று தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
வீடு பூட்டியிருந்தது
புனே வாகட் பகுதியை சேர்ந்தவர் தீபக் (வயது35). இவருக்கு சுபம் (10) மற்றும் ரூபம் (8) ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர். இருவரும் அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தனர். தீபக்கின் மனைவி அருகில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை காரணமாக சிறுவர்கள் இருவரும் வீட்டில் இருந்தனர்.
இந்த நிலையில், தீபக்கின் மனைவி வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
உயிருக்கு போராடிய சிறுவர்கள்
இதனால் அவர் கதவை தட்டி பார்த்தார். வெகுநேரமாக தட்டியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவி யுடன் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள மின்விசிறியில் தீபக் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
சிறுவர்கள் இருவரும் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதை பார்த்து தீபக்கின் மனைவி அதிர்ச்சியில் உறைந்தார். அவர் கணவரின் உடலையும், பிள்ளைகளையும் பார்த்து கதறி அழுதார். பக்கத்து வீட்டுக்காரர்கள் சிறுவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
போலீஸ் விசாரணை
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த வாகட் போலீசார் தந்தை, மகன்கள் மூன்று பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் தீபக் தனது இரண்டு மகன்களையும் கழுத்தை நெரித்து விட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இருப்பினும் அதற்கான காரணம் தெரியவில்லை. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபக்கின் மனைவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story