வேனில் கடத்தி வரப்பட்ட 960 மதுபாட்டில்கள் பறிமுதல்


வேனில் கடத்தி வரப்பட்ட 960 மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 20 Aug 2018 4:26 AM IST (Updated: 20 Aug 2018 6:00 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே வேனில் கடத்தி வரப்பட்ட 960 மதுபாட்டில்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் அடுத்த வாக்கூர் பகண்டைகூட்டுரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். போலீசாரை பார்த்ததும் வேனில் வந்த 2 பேர் சற்று முன்னதாகவே வேனை நிறுத்தி விட்டு, இறங்கி தப்பி ஓடினார்கள். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை விரட்டிச்சென்றனர். இருப்பினும் அவர்களை பிடிக்க முடியவில்லை.

இதையடுத்து போலீசார் வேனை சோதனை செய்ததில், 960 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து வேனில் இருந்த ஆவணங்களை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் விழுப்புரம் அருகே உள்ள எல்.ஆர்.பாளையத்தை சேர்ந்த பன்னீர், ஏழுமலை ஆகியோர் என்பதும், புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்துக்கு மதுபாட்டில்களை வேனில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து வேனில் இருந்த 960 மதுபாட்டில்களையும், அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட வேனையும் போலீசார் பறிமுதல் செய்ததோடு, தப்பி ஓடிய பன்னீர், ஏழுமலை ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட வேன், மதுபாட்டிலின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். 

Next Story