பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சோதனை ஓட்டம்


பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சோதனை ஓட்டம்
x
தினத்தந்தி 20 Aug 2018 3:15 AM IST (Updated: 20 Aug 2018 4:39 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி நடப்பதையொட்டி பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.

பழனி, 

பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் படிப்பாதை, யானைப்பாதை, மின்இழுவை ரெயில், ரோப்கார் ஆகியவற்றின் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர். இதில் ரோப்கார் மூலம் 3 நிமிடங்களில் மலைக்கோவிலுக்கு சென்றுவிடலாம் என்பதால் பகதர்களின் முதல் தேர்வாக ரோப்கார் சேவை உள்ளது.

இத்தனை சிறப்பு வாய்ந்த ரோப்காரில் பக்தர்களின் பாதுகாப்புக்காக தினசரி, மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அதன்படி தினசரி மதிய உணவு இடைவேளையின் போது ஒரு மணி நேரமும், மாதத்துக்கு ஒரு முறை நாள் முழுவதும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

இதேபோல் வருடாந்திர பராமரிப்பு பணியின் போது சுமார் 40 நாட்களுக்கு ரோப்கார் சேவை நிறுத்தப்படும். அந்த வகையில், கடந்த மாதம் 12-ந்தேதி ரோப்காரில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் தொடங்கியது. ரோப்கார் நிலையத்தின் மேல், கீழ் தளங்களில் உள்ள உபகரணங்கள் கழற்றப்பட்டு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை ரோப்கார் மேல்தளம், கீழ்தளத்தில் உள்ள சக்கரங்களுடன் கம்பிவடம் பொருத்தப்பட்டு பெட்டிகளை இணைக்கும் பணி நடந்தது. பின்னர் மாலையில் ரோப்காரில் முதற்கட்ட சோதனை ஓட்டம் நடந்தது. இதுகுறித்து கோவில் அதிகாரிகளிடம் கேட்ட போது, ரோப்கார் பராமரிப்பு பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. முதற்கட்ட சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. விரைவில் அனைத்து பரிசோதனைகளும் நிறைவு செய்யப்பட்டு ரோப்கார் சேவை பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றனர். 

Next Story