தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாலிபர்


தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாலிபர்
x
தினத்தந்தி 20 Aug 2018 3:30 AM IST (Updated: 20 Aug 2018 5:01 AM IST)
t-max-icont-min-icon

ஏரல் அருகே தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் வாலிபர் அடித்து செல்லப்பட்டார்.

ஏரல், 


தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூர் பரதர் தெருவை சேர்ந்தவர் ஜான். இவருடைய மகன் ராகேஷ் (வயது 21). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மதியம் தனது நண்பர்களான சென்னையை சேர்ந்த அன்பு (28), ஆத்தூரை சேர்ந்த ஜெராசின் (24) ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார். அவர்கள் 3 பேரும் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தை பார்ப்பதற்காக சொக்கப்பழகரைக்கு வந்தனர். பின்னர் 3 பேரும் அங்கு உள்ள தடுப்பணையின் மேல் பகுதியில் தண்ணீரில் இறங்கினர். அப்போது எதிர்பாராத விதமாக ராகேசை தண்ணீர் அடித்து சென்றது. இதில் நிலை தடுமாறிய அவர் தடுப்பணையின் கீழ் பகுதிக்கு சென்று ஆற்றின் நடுவில் உள்ள ஒரு கருவேல மரத்தை பிடித்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்கள் ராகேசை மீட்க ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ராகேசை மீட்க முயன்றனர். ஆனால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்களால் தண்ணீரில் இறங்க முடியவில்லை. இதனையடுத்து புன்னகாயல் பகுதியில் இருந்து படகு கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் சுமார் 3 மணி நேரம் தண்ணீரில் கருவேல மரத்தை பிடித்து கொண்டு போராடிய அந்த வாலிபர் ஒரு வழியாக ஆற்றை நீந்தி கடந்து வாழவல்லான் கரைக்கு திரும்பினார்.

இதனையடுத்து போலீசார், ராகேசிடம் அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story