குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி


குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
x
தினத்தந்தி 20 Aug 2018 3:45 AM IST (Updated: 20 Aug 2018 5:29 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் அருவிகளில் நேற்று வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

தென்காசி, 


நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் கடந்த மே மாதம் இறுதியில் சீசன் தொடங்கி, தற்போது வரை அனைத்து அருவிகளிலும் தண்ணீர் தொடர்ந்து விழுந்து கொண்டே இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னதாக பலத்த மழை பெய்ததையொட்டி குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் மீண்டும் கடந்த 14-ந் தேதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கு குளிப்பது ஆபத்து என்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி மறுத்தனர். தொடர்ந்து 5 நாட்களாக மழை பெய்து வந்ததால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறையவில்லை.

நேற்று காலை மலைப்பகுதியில் மழை குறைந்ததையடுத்து குற்றாலம் அருவிகளிலும் வெள்ளம் குறைந்தது.
இதனால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி வழங்கினர்.
நேற்று விடுமுறை நாளாக இருந்தும் குற்றாலத்துக்கு குறைவான சுற்றுலா பயணிகளே வந்திருந்தனர். அவர்கள், மெயின்அருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். 

Next Story