பழைய ஓய்வூதிய திட்டம் சாத்தியமா?
பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டுமென்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அவ்வப்போது போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசும் ஓய்வூதிய திட்டம் பற்றிய அறிக்கை தாக்கல் செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீதர் தலைமையில் கமிட்டி அமைத்து உள்ளது.
சமீபத்தில் அமைச்சர் ஜெயக்குமார் இதுதொடர்பாக விளக்கம் அளித்தார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சம்பளத்துக்கு ஆகும் தொகை ரூ.45 ஆயிரத்து 6 கோடியாகும். அரசு ஊழியர்கள் ஓய்வூதியத் தொகை ரூ.20 ஆயிரத்து 397 கோடியாகும். தமிழக அரசின் வருவாய் ரூ.93 ஆயிரத்து 795 கோடியாகும். தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 12 லட்சம் பேரும், ஓய்வூதியம் பெறுவோர் 7 லட்சத்து 42 ஆயிரம் பேரும் உள்ளனர்.
தமிழக அரசின் வருவாயில் சுமார் 70 சதவீதம் இவர்களுக்கு ஊதியமாகவும், ஓய்வூதியமாகவும் தரப்படுகிறது. சுமார் 24 சதவீதம் வருவாய் வட்டிக்காக செலுத்தப்படுகிறது. மீதம் உள்ள 6 சதவீதம் மற்றும் மத்திய அரசின் பங்களிப்பு ரூ.41 ஆயிரத்து 600 கோடி மூலம் தமிழக மக்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்று அந்த விளக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
இதுபோன்ற சூழலில் பழைய ஓய்வூதிய திட்டம் சாத்தியமா? என்ற கேள்வி எழுகிறது. பழைய ஓய்வூதிய திட்டம் என்பது, ஒருவர் ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் காலங்களில், அலவன்சோடு சேர்த்து அவர் இறுதியாக பெற்ற சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாகமாதந்தோறும் வழங்கப்படும்.
ஆனால் இந்த ஓய்வூதியம் 1-4-2003 அன்றுக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு கிடையாது. அவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த முறைப்படி அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் தொகை பிடித்தம் செய்யப்படும். இந்த தொகை அளவுக்கு அரசும் ஒரு தொகையை செலுத்தும்.
பிறகு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது இந்த தொகை மொத்தமாக வழங்கப்படும். 2004-ம் ஆண்டில் இருந்து மத்திய அரசும் இந்த பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது.
நம் நாடு ஜனநாயக நாடு. 1976-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சோசலிசம் என்ற கோட்பாடு சேர்க்கப்பட்டது. சோசலிசம் என்பது ஒரு நாட்டில் இருக்கக்கூடிய வசதிகளை அதாவது செல்வத்தை சமமாக பங்கிட்டுக்கொள்வதே ஆகும்.
ஆனால் இங்கே ஒருசாராருக்கு ஓய்வூதியமாக பெருந்தொகையை அள்ளிக்கொடுப்பதும், மற்றொரு சாராருக்கு (அதாவது 1-4-2003-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்கள்) ஓய்வூதியம் இல்லை என்று சொல்வதும் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானதாகும்.
தற்போது நடைமுறையில் இருக்கும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வுபெறும் ஊழியருக்கு மொத்தமாக தொகையை கொடுக்கும்போது அது அவருக்கு பயனுள்ளதாக இருக்காது. அவரது பிள்ளைகள் மொத்தமாக அந்த பணத்தை பெற்றுக்கொள்ளவும் வாய்ப்புள்ளது. அந்த பணத்தை சரியாக பயன்படுத்த முடியாமல் போகும் வாய்ப்பும் இருக்கிறது. ஓய்வூதியம் என்றாலே அது மாதாமாதம் கொடுக்கப்பட வேண்டியதுதான்.
ஆனால் குறிப்பிட்ட நாளுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் உண்டு என்றும், அதற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் இல்லை என்று சொல்வதும் எந்த விதத்தில் நியாயமாகும்? இது வேதனைக்குரியதும் கூட.
ஓய்வூதியம் என்பது பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியருக்கு உயிர் வாழ தேவையான அளவுக்கு தொகை கொடுக்கப்பட வேண்டும். அதே வேளையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின்படி, இறுதி காலத்தில் பெற்ற சம்பளத்தில் 50 சதவீதம் மற்றும் அலவன்ஸ் தொகையை ஓய்வூதியமாக கொடுப்பது என்பது தேவைக்கு அதிகமாகும்.
அதாவது, அரசு செயலராக இருப்பவர் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் சம்பளம் வாங்கும்போது, அவருக்கு ரூ.90 ஆயிரமும், அலவன்சும் ஓய்வூதியமாக கொடுக்கப்படும். ஆனால் இது தேவைக்கு அதிகமானது. இப்படி, ஒருசிலருக்கு தேவைக்கு அதிகமாக கொடுப்பதும், ஒருசிலருக்கு அவசியத் தேவை பூர்த்தி செய்யும் அளவுக்கு கூட கொடுக்க மறுப்பதும் சட்டவிரோதம்.
50 சதவீத சம்பளம், அலவன்சை ஓய்வூதியமாக கொடுக்கும் திட்டம் 1995-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அரசாணையாக வெளியிடப்பட்டது. அதற்கு முன்பாக அனைவருக்கும் ரூ.1,500 என்ற முறையில்தான் ஓய்வூதியம் வழங்கப்பட்டது.
தற்போது அரசு உயர் அதிகாரிகள், குடிமைப்பணி அதிகாரிகள் தங்களுக்கு எவ்வளவு அதிகபட்ச சலுகை வேண்டுமோ, அத்தனையையும் பெற்றுக்கொண்டனர். அரசு ஊழியர்கள், இளநிலை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் சம்பளம் ரூ.80 ஆயிரத்துக்கும் அதிகம். அரசு செயலர் சம்பளம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகம்.
அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை என்பது ரூ.20 லட்சமாகவும், ஈட்டிய விடுப்பு என்பது 1 வருடத்திற்கு 1 மாதம் என்ற அடிப்படையிலும் வழங்கப்படுகிறது. ஓய்வு பெறும் சமயத்தில் எடுக்காத விடுமுறைகள் இருக்கும்பட்சத்தில், அதில் அதிகபட்சம் 8 மாதங்களை சம்பளமாகவும் பெற்றுக்கொள்ளலாம். ஈட்டிய விடுப்பு 240 நாட்களுக்கு மேல் குவிந்து இருந்தால் அதை விடுமுறையாக எடுத்துக்கொள்ளலாம். அரசு ஊழியர்களுக்கு அதிகபட்ச சலுகை, அதிகபட்ச விடுப்பு வழங்கப்படுகிறது.
இந்த ஈட்டிய விடுப்பு என்ற கோட்பாடு ஆங்கிலேயர் காலத்தில் 1933-ல் விடுப்பு விதிகள் என்று இருந்தது. அது இப்போதும் அப்படியே நடைமுறையில் உள்ளது. இப்போது அரசு ஊழியர்கள் அதிகமாக சம்பளம் வாங்கும் போது, பணிக்கொடை, ஈட்டிய விடுப்பு ஆகியவை தேவையற்ற சலுகைகள். இந்த இரண்டு சலுகைகளும் ரத்து செய்யப்பட வேண்டியதாகும்.
‘அனைவருக்கும் ஓய்வூதியம் சாத்தியமே’ என்பதை அடைய இப்போதுள்ள 50 சதவீதம் சம்பளம் மற்றும் அலவன்ஸ் என்ற முறை மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய முறைகளை ரத்து செய்துவிட்டு, அதிகபட்ச ஓய்வூதியம் என்ற கோட்பாடு அதாவது 1995-க்கு முன்பு இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவரலாம்.
உதாரணத்துக்கு ஏ பிரிவு ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.40 ஆயிரமும், பி பிரிவு ஊழியர்களுக்கு அதிகபட்சம் ரூ.30 ஆயிரமும், சி பிரிவு ஊழியர்களுக்கு அதிகபட்சம் ரூ.20 ஆயிரமும், டி பிரிவு ஊழியர்களுக்கு அதிகபட்சம் ரூ.10 ஆயிரமும் என நிர்ணயம் செய்து, அலவன்சு இல்லாமல் மாதாமாதம் ஓய்வூதியம் வழங்கலாம். இது மிகச்சிறந்த நடைமுறையாக இருக்கும்.
கணக்கெடுப்பின்படி, ஜெர்மனியில் 63 சதவீதம் பேரும், பிரேசில் நாட்டில் 31 சதவீதம் பேரும் ஓய்வூதியம் பெறுகிறார்கள். இந்தியாவிலோ 7.4 சதவீதம் பேர் ஓய்வூதியம் பெறுகிறார்கள். ஒருவர் அரசு ஊழியராக பல ஆண்டுகள் பணியாற்றிவிட்டு அவருக்கு ஓய்வூதியம் இல்லை என்று சொல்வது நியாயமற்றது.
மேலே சொன்ன நடைமுறைபடி, அவரவர் பணி, அந்தஸ்து நிலைக்கு தக்க அதிகபட்ச ஓய்வூதியக் கோட்பாடு என்பதன் அடிப்படையில் விதிகள் வகுத்தால் பழைய ஓய்வூதிய திட்டம் சாத்தியம்.
ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி வேலு,
உறுப்பினர், தமிழ்நாடு மாநில சட்ட ஆணையம்
Related Tags :
Next Story