சூரியசக்தியை திரவ வடிவில் சேமிக்கலாம்!


சூரியசக்தியை திரவ வடிவில் சேமிக்கலாம்!
x
தினத்தந்தி 20 Aug 2018 2:47 PM IST (Updated: 20 Aug 2018 2:47 PM IST)
t-max-icont-min-icon

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சூரியசக்தியை திரவநிலையில் சேமிப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

உலகில் உள்ள மற்ற வளங்களைவிட சூரியசக்தியால் அதிகப்படியான ஆற்றலை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மாறிவரும் காலநிலை, இரவு-பகல், மழை உள்ளிட்ட காரணிகள் சூரிய சக்தியை பெற இடையூறாக உள்ளன. இதனால் எந்த சூழ்நிலையிலும் சூரியசக்தியில் இருந்து ஆற்றலைப் பெறும் கருவிகளை வடிவமைப்பதில் உலக விஞ்ஞானிகள் முனைப்பு காட்டி வருகிறார்கள்.

இத்தகைய ஆராய்ச்சி ஒன்றின் பயனாக ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சூரியசக்தியை திரவநிலையில் உள்ள ரசாயனங்களில் சேமிக்கவும், அதை தேவையான இடங்களில் வெப்ப ஆற்றலாகவும், இதர தேவைகளுக்கான ஆற்றலாகவும் மாற்றிப் பயன்படுத்தும் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.

கூட்டன்பர்க்கில் உள்ள ஷால்மெர்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த சாதனை தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இதற்கான தொழில்நுட்பத்தை அவர்கள் ‘மாலிகுலர் சோலார் தெர்மல்’ என்கிறார்கள். சுருக்கமாக மோஸ்ட்(MOST) என்று அழைக்கப்படுகிறது.

மற்ற சூரியசக்தி தொழில்நுட்பங்களைவிட மாறுபட்டு செயல்படும் இந்த சூரியசக்தி சேமிப்புமுறை பற்றி விஞ்ஞானிகளிடம் கேட்டால், “வெப்பமேற்றல் மற்றும் மின்னாற்பகுப்பு எதிர்வினை அடிப்படையில் சூரியசக்தி ஆற்றலை ரசாயன திரவத்தில் சேமிக்கிறோம். 6 ஆண்டு ஆராய்ச்சியின் முடிவில் இதை சாதித்துள்ளோம். உயிரினங்களின் உடலில் சூரியசக்தியால் உயிர்வேதி இணைப்புகள் ஏற்படுவதைப்போல இந்த முறையில் சூரியசக்தி சேமிக்கப்படுகிறது. இப்படி சக்தியூட்டப்பட்ட ஹைட்ரோகார்பன்கள் “நார்பர்னாடையின்” எனப் படுகிறது. இதிலிருந்து எதிர்வினை மூலம் வெப்ப ஆற்றலை பெற முடியும். அதை வேறுவகை ஆற்றல்களாக மாற்றிப் பயன்படுத்த முடியும். சூரிய ஆற்றல் திரவ வடிவில் சேமிக்கப்படுவதால் இதை இடம் மாற்றம் செய்து பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது” என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

எளிதில் கிடைக்கும் சூரிய ஆற்றலை, எள்ளளவும் வீணாக்காமல் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் மேலும் பெருகட்டும்!

Next Story