யானைகளுக்கு புற்றுநோய் ஏற்படுவதில்லை, ஏன்?


யானைகளுக்கு புற்றுநோய் ஏற்படுவதில்லை, ஏன்?
x
தினத்தந்தி 20 Aug 2018 5:37 PM IST (Updated: 20 Aug 2018 5:37 PM IST)
t-max-icont-min-icon

மனிதர்கள் உள்பட பல உயிரினங்களைத் தாக்கிக் கொல்லும் புற்றுநோயால் யானைகள் மட்டும் பாதிக்கப்படுவதே இல்லை.

கொங்கணர் என்பவர்கள் யாகங்கள் மூலமாக மாபெரும் தவப்பலன் பெற்ற முனிவர்கள். அவர்கள் பார்த்தால் போதும் பச்சை மரம் கூட பற்றிக்கொண்டு எரியும். அத்தகைய கொங்கணர் ஒருவர் வீதியில் நடந்துசென்றபோது அவருக்கு மேலே பறந்த கொக்கு ஒன்று அவர் மீது எச்சமிட்டுவிட்டது.

அவ்வளவுதான், கொங்கணருக்கு வந்ததே கோபம், அதே கோபத்தில் அந்த கொக்கை ஒரு பார்வை பார்த்தார். அவர் பார்த்த மாத்திரத்தில் கொக்கு எரிந்து சாம்பலாகி கீழே விழுந்தது. கொக்கை எரித்த பெருமிதத்தில் கொங்கணர் யாசகம் கேட்டு சென்று நின்ற இடம் திருவள்ளுவரின் வீடு.

ஆனால் கொங்கணருக்கு பிச்சை போட திருவள்ளுவரின் மனைவி வாசுகிக்கு சற்று தாமதமாகிவிட்டது. அந்த தாமதத்தால் கோபம் கொண்ட கொங்கணர், ‘என் மீது அவ்வளவு அலட்சியமா உனக்கு? என்று வாசுகியையும் எரிப்பது போலப் பார்க்கிறார். ஆனால் வாசுகிக்கு ஒன்றுமே ஆகவில்லை.

வாசுகி கொங்கணரின் பார்வைக்கான பொருளைப் புரிந்துகொண்டு, ‘கொக்கென்று நினைத்தாயோ... கொங்கணவா? என்கிறார். நிற்க. இந்த இலக்கிய செய்தியை இன்றைய மருத்துவ தொழில்நுட்ப செய்தி ஒன்றுடன் ஒப்பிடுவோம். அதீத அறிவு மற்றும் தொழில்நுட்ப பலம் கொண்ட மனிதர்கள் உள்பட பல உயிரினங்களைத் தாக்கிக் கொல்லும் புற்றுநோயால் யானைகள் மட்டும் பாதிக்கப்படுவதே இல்லை.

ஆக, கொக்கை எரித்த கொங்கணர்தான் புற்றுநோய் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால், கொங்கணரின் பார்வையால் எரிந்துபோகாத வாசுகிதான் யானை அல்லவா?

தானென்ற அகந்தை துளியும் இல்லாமல், தனக்கென வாழாமல் சேவை செய்யும் வாசுகிக்கு, கொங்கணரின் தவப்பலனை விட அதிக சக்தி உண்டு என்றும், அதனாலேயே கொங்கணரால் வாசுகியை எரிக்க முடியவில்லை என்றும் புராணம் கூறுகிறது.

பல்வேறு சக்திகள் நிறைந்த மனிதர்களாலேயே புற்றுநோயை எதிர்க்க முடியாதபோது, பரிணாமத்தில் மனிதர் களுக்கு முன்பு தோன்றிய யானைகளால் புற்றுநோயை வெற்றிகரமாக எதிர்க்க முடிவதற்கும், அதனால் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்க முடிவதற்கும் என்ன காரணம் என்று பல ஆண்டுகால ஆய்வுக்குப் பிறகும் விஞ்ஞானிகளால் கண்டறிய முடியவில்லை.

இந்தநிலையில் சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களின் சமீபத்திய ஆய்வில், யானைகளின் புற்றுநோய் எதிர்ப்பு சக்திக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக, ‘ஒரு உயிரினத்தின் உடலில் எவ்வளவு அதிகமான உயிரணுக்கள் இருக்கின்றனவோ, அந்த உயிரினத்துக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு, ஆபத்தும் அவ்வளவு அதிகம்’ என்கிறது ஒரு ஆய்வு. பீட்டோஸ் பாரடாக்ஸ் (Peto’s paradox) எனும் புற்றுநோய் தொடர்பான, நோய்பரவுவியல் ஆய்வாளரான ரிச்சர்டு பீட்டோவின் இந்த கருத்து முரண்பாடு மிக்கதாக கருதப்படுகிறது.

ஆனால் விநோதமாக, பூமியிலுள்ள ஒரு இனத்தைச் சேர்ந்த அனைத்து உயிரினங்களுக்குப் பொருந்தும் இந்த பீட்டோஸ் முரண்பாடு, வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த உயிரினங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது பொருந்துவதில்லை.

மேலும், மிகவும் பெரிய உடல்கொண்ட, அதனால் பலப்பல கோடி அதிகமான உயிரணுக்கள் கொண்ட யானைகளுக்கு புற்றுநோய் ஏற்படுவதில்லை என்பதும் புரியாத புதிராகத்தான் உள்ளது. ஒருவேளை, யானைகளின் உயிரணுக்களில் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால், அத்தகைய உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதால், யானைகளின் புற்றுநோய் எதிர்ப்பு சக்தியும் அவ்வளவு அதிகமாகிவிடுகிறதோ என்று சிந்தித்தனர் விஞ்ஞானிகள்.

அதன் பலனாக, கடந்த 2015-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், யானைகளின் உயிரணுக்களில் டிபி 53 (TP53) எனும் புற்றுநோய் எதிர்ப்பு மரபணு இருப்பதும், முக்கியமாக அது சுமார் 20 என்ற எண்ணிக்கையில் இருப்பதும் கண்டறியப்பட்டது.

மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து பாலூட்டிகளின் உயிரணுக்களில் 2 டிபி53 மரபணு மட்டும்தான் இருக்கும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. உடலில் உள்ள ஏதாவது ஒரு உயிரணுவில் டி.என்.ஏ. சேதம் ஏற்பட்டால், அந்த சேதத்தை உடனே கண்டறிந்து அதனை சரி செய்யச் சொல்லும், அப்படி அது முடியாவிட்டால் அந்த உயிரணுவை கொல்ல ஏற்பாடு செய்வதுதான் டிபி 53 மரபணுவின் வேலை என்பது குறிப் பிடத்தக்கது.

ஆனால், யானைகள் போன்ற மிகப்பெரிய மற்றும் நீண்ட ஆயுட்காலம் கொண்ட உயிரினங்கள் மீது நவீன ஆய்வுகள் மேற்கொள்வது அவ்வளவு சுலபமான காரியமல்ல.

அதனால், மரபியலாளர் வின்சென்ட் லின்ச் மற்றும் ஆய்வுக்குழுவினர், யானைகளின் திசு மாதிரிகளை மட்டும் எடுத்துக்கொண்டு, யானையின் மிகச்சிறிய உறவினரான மானடீ (manatee) மற்றும் பூனை அளவுள்ள ஹைராக்ஸ் (hyrax) ஆகியவற்றின் திசு மாதிரிகளையும் சேகரித்தனர். பின்னர், அவற்றின்மீது புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனங்களான கார்சினோஜென்களை (carcinogens) பயன்படுத்தி டி.என்.ஏ சேதம் ஏற்படுத்தினர்.

இந்த ஆய்வில், மிகவும் ஆச்சரியமாக, யானையின் உயிரணுக்கள் கார்சினோஜென் தாக்கிய உடனேயே இறந்து போயின. கார்சினோஜென் தாக்கிய உயிரணுக்கள் உடனே இறந்துபோவதால் அவை புற்றணுவாக, புற்றுநோயாக மாற வாய்ப்பே இல்லை என்கிறார் ஆய்வாளர் லின்ச்.

முக்கியமாக, புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் லியூக்கீமியா இன்ஹிபிட்டரி பேக்டர் (leukaemia inhibitory factor, or LIF) எனும் மரபணு யானைகளின் உயிரணுக்களில் என்ன செய்கிறது என்பதும் இந்த ஆய்வில் பரிசோதிக்கப்பட்டது.

யானைகளின் உயிரணுக்களில் அதிகமான எண்ணிக்கையில் எல்.ஐ.எப். (LIF) போலி மரபணுக்கள் (psuedogene/வேலை செய்யாத மரபணுக்கள்) இருந்ததும், கார்சினோஜென் தாக்கிய உடனேயே அவற்றில் ஒன்றான எல்.ஐ.எப். 6 (LIF6) எனும் மரபணு தூண்டப்பட்டு, அவை அதிக எண்ணிக்கையில் உற்பத்தியாகி செயல்பட்டதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டு, உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆக மொத்தத்தில், யானைகளுக்கு புற்றுநோய் ஏற்படாததற்கு, அவற்றின் டிபி53 மற்றும் எல்.ஐ.எப்.6 ஒன்றிணைந்து செயல்பட்டு, கார்சினோஜென் தாக்கிய உயிரணுக்களை உடனே கொன்றுவிடுவதே காரணமாக இருக்கக்கூடும் என்கிறது லின்ச் குழுவினரின் இந்த புதிய ஆய்வு.

Next Story