கோவில் தீ மிதி விழாவின்போது அக்கினி குண்டத்தில் தவறி விழுந்து 2 பக்தர்கள் படுகாயம்


கோவில் தீ மிதி விழாவின்போது அக்கினி குண்டத்தில் தவறி விழுந்து 2 பக்தர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 21 Aug 2018 3:15 AM IST (Updated: 21 Aug 2018 12:08 AM IST)
t-max-icont-min-icon

வில்லிவாக்கத்தில் கோவில் தீ மிதி விழாவின்போது அக்கினி குண்டத்தில் தவறி விழுந்து 2 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.

அம்பத்தூர்,

சென்னை வில்லிவாக்கம் பஸ் நிலையம் அருகே உள்ளது பாலி அம்மன் கோவில். மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிமாத திருவிழா நடந்து வருகிறது. இதனையொட்டி நேற்று முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி விழா நடந்தது.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக சுமார் 1000–க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கு திரண்டனர். பின்பு பக்தர்கள் 15 பேர் கொண்ட குழுவாக அக்கினி குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

அயனாவரம் பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்த கதிர்வேல் (வயது 33) மற்றும் வில்லிவாக்கம் யுனைடெட் காலனி அன்னை தெரசா தெருவை சேர்ந்த மனோகரன் (52) ஆகியோர் 15–க்கும் மேற்பட்ட பக்தர்களுடன் சேர்ந்து அக்கினி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர்.

அப்போது திடீரென நெரிசல் ஏற்பட்டதால் மனோகரனும், கதிர்வேலும் எதிர்பாராதவிதமாக அக்கினி குண்டத்தில் தவறி விழுந்தனர். அங்கு திரண்டு நின்று கொண்டிருந்த பக்தர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அங்கு ஏற்கனவே பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு நெருப்பு கனலில் சிக்கிய இருவரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அக்கினியின் பிடியில் சிக்கியதால் கதிர்வேலும், மனோகரனும் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக தீயணைப்பு துறையினர் 2 பேரையும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பக்தர்கள் இருவருக்கும் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீ மிதி விழாவின்போது பக்தர்கள் இருவர் அக்கினி குண்டத்தில் சிக்கி படுகாயம் அடைந்து இருப்பது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story