திருச்சி தொட்டிப்பாலத்தில் வழிந்தோடும் தண்ணீரில் பொதுமக்கள் ஆனந்த குளியல்


திருச்சி தொட்டிப்பாலத்தில் வழிந்தோடும் தண்ணீரில் பொதுமக்கள் ஆனந்த குளியல்
x
தினத்தந்தி 21 Aug 2018 4:15 AM IST (Updated: 21 Aug 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் உய்யகொண்டான் வாய்க்காலில் நீர் வெளியேறியது. தொட்டிப்பாலத்தில் வழிந்தோடும் தண்ணீரில் பொதுமக்கள் ஆனந்த குளியல் போட்டனர்.

திருச்சி,

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் கடந்த சில நாட்களாக கடல் போல் காட்சி அளிக்கிறது.மேட்டூர் அணையில் இருந்து கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு அதிக அளவில் தண்ணீர் வருவதால் காவிரியின் அனைத்து கிளை வாய்க்கால்களிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தில் சுமார் 32 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாய்ந்து முக்கிய பாசன ஆதாரமாக விளங்கும் உய்யகொண்டான் வாய்க்காலில் வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

பெட்டவாத்தலை, சோமரசம்பேட்டை, திருச்சி புத்தூர் கலிங்கி (தொட்டிப்பாலம்),கோர்ட்டு, தென்னூர், பாலக்கரை, வரகனேரி, அரியமங்கலம் வழியாக திருவெறும்பூர் சேராண்டி குளம் வரை செல்லும் இந்த உய்யகொண்டான் வாய்க்காலிலும் தண்ணீர் இரு கரைகளையும் தொட்டபடி செல்கிறது. குறிப்பாக கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் உள்ளிட்ட சில பகுதிகளில் வாய்க்காலில் இருந்து வெளியேறிய தண்ணீர் கரைகளில் தேங்கி நிற்கிறது.

தொட்டிப்பாலத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர் பாறைகள் வழியாக வழிந்தோடுவதால் அந்த தண்ணீரில் பொதுமக்கள் ஆனந்த குளியல் போட்டு வருகிறார்கள். குழுமாயி அம்மன் கோவில் அருகில் நேற்று ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் குளித்து மகிழ்ந்தனர். சிலர் நாய்களை கொண்டு வந்து குளிப்பாட்டினார்கள்.

காவிரி ஆற்றில் எந்த படித்துறைகளிலும் இறங்கி குளிக்க முடியாத அளவிற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் உய்யகொண்டான் வாய்க்காலில் நீச்சல் அடிப்பதற்காக குளிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

Next Story