வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு


வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 21 Aug 2018 3:15 AM IST (Updated: 21 Aug 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 4 அமைச்சர்கள் முன்னிலையில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தண்ணீரை திறந்து வைத்தார்.

தேனி,


தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 71 அடி. முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் அணைக்கு கடந்த 2 மாதங்களாகவே நீர்வரத்து அதிக அளவில் இருந்து வருகிறது. இதனால், 2 மாதங்களுக்கு முன்பே முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த தண்ணீர் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளின் முதல்போக பாசனத்துக்கு போக மீதம் தண்ணீர் வைகை அணைக்கு வருகிறது. இதன் மூலம் வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்தது. கடந்த வாரம் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

இதற்கிடையே மூல வைகை ஆற்றில் இருந்தும் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது. மொத்த உயரம் 71 அடியாக இருந்த போதும் அணையின் பாதுகாப்பு கருதி முழு கொள்ளளவை 69 அடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் நிர்ணயித்துள்ளனர்.

அதன்படி நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து நேற்று முன்தினம் வினாடிக்கு 3 ஆயிரத்து 333 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இந்தநிலையில் வைகை அணையில் இருந்து திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களின் பாசனத்துக்காக தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.

தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ஜி.பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்றனர். 4 அமைச்சர்கள் முன்னிலையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீரை திறந்து விட்டார்.
இதைத்தொடர்ந்து 7 மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்து தண்ணீர் வெளியேறியது. பின்னர் அமைச்சர்கள், கலெக்டர் கள் பல்லவி பல்தேவ் (தேனி), டி.ஜி.வினய் (திண்டுக்கல்), வீரராகவ ராவ் (மதுரை), லதா (சிவகங்கை) ஆகியோர் மதகுகள் வழியாக வெளியேறிய தண்ணீருக்கு மலர் தூவினர்.

திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ஆகிய 3 மாவட்டங் களுக்கும், 120 நாட்களுக்கு வினாடிக்கு 1,130 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் மூலம் மொத்தம் 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, மதுரை வடக்கு, மேலூர், வாடிப்பட்டி, திருமங்கலம் ஆகிய தாலுகாக்களுக்கு உட்பட்ட 98 ஆயிரத்து 764 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன,

இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் 199 ஏக்கர் நிலங் களும், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், சிவகங்கை தாலுகாக்களுக்கு உட்பட்ட 6 ஆயிரத்து 39 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெற உள்ளது. தண்ணீர் திறந்து வைத்தபிறகு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
செப்டம்பர் 15-ந்தேதி தான், இந்த 1 லட்சத்து 5 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு ஒருபோக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்ற அரசாணை உள்ளது. இருப்பினும் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பெய்ததால் முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடக்கூடிய நல்ல சூழல் நமக்கு ஏற்பட்டுள்ளது.

அதாவது, இதற்கு முன்பு, 1984, 1991, 2005 ஆகிய ஆண்டுகளில் தான் செப்டம்பர் 15-ந்தேதிக்கு முன்பு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையில் இருந்து 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். 18-ம் கால்வாய் மற்றும் பி.டி.ஆர்.- தந்தை பெரியார் வாய்க்காலில் விரைவில் தண்ணீர் திறக்கப்படும்.
கேரளாவில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதால், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஒரு அடி குறைத்து 141 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்க சுப்ரீம் கோர்ட்டில் இருந்து உத்தரவு பெறப்பட்டு உள்ளது. இதனால், ஒரு அடி குறைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வரத்தை பொறுத்து, நீர்மட்டம் உயர்வதும், குறைவதும் இயற்கையானது. நீர்வரத்தை பொறுத்து 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் பார்த்திபன் (தேனி), உதயகுமார் (திண்டுக்கல்), எம்.எல்.ஏ.க்கள் ஜக்கையன், வி.வி.ராஜன் செல்லப்பா, ஆர்.மாணிக்கம், எஸ்.எஸ்.சரவணன், நீதிபதி, செல்வம், வி.பி.பி.பரமசிவம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 

Next Story