அரசு மருத்துவமனை டாக்டர்கள் போராட்டம்


அரசு மருத்துவமனை டாக்டர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 21 Aug 2018 3:30 AM IST (Updated: 21 Aug 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மற்றும் திருத்தணியில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

தமிழகத்தில் பணிபுரியும் அரசு டாக்டர்களுக்கு மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கவேண்டும். முறையான பதவி உயர்வு வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் கூட்டு நடவடிக்கை குழுவின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் டாக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரமா, ஒருங்கிணைப்பாளர்கள் ராஜ்குமார், நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் திரளான அரசு மருத்துவமனை டாக்டர்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்தணியில் உள்ள அரசு மருத்துவமனை முன்பு திருத்தணி பிராந்தியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் அரசு டாக்டர்கள் தங்களது அனைத்து மருத்துவ ஊழியர்கள் சங்கம் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சந்திரன் தலைமை தாங்கினார். இதில் திருத்தணி அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் ஹேமாவதி மற்றும் திருத்தணி பிராந்தியத்துக்கு உட்பட்ட பீரகுப்பம், பூனிமாங்காடு, அத்திமாஞ்சேரிபேட்டை, ஆர்.கே.பேட்டை ஆகிய மருத்துவமனைகளை சேர்ந்த டாக்டர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

அப்போது அவர்கள் கூறும்போது, ‘‘எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்போராட்டங்கள் நடத்தப்படும். முதல் கட்டமாக வருகிற 24–ந்தேதி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். 27–ந்தேதி முதல் அலுவலக ரீதியாக ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும். அடுத்தமாதம் 21–ந்தேதி அடையாள வேலை நிறுத்தம் செய்வோம்’’ என்றனர்.


Next Story