வேடசந்தூர் ஒன்றிய அலுவலகத்தை குடிநீர் கேட்டு பொதுமக்கள் முற்றுகை


வேடசந்தூர் ஒன்றிய அலுவலகத்தை குடிநீர் கேட்டு பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 21 Aug 2018 3:30 AM IST (Updated: 21 Aug 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் ஒன்றிய அலுவலகத்தை குடிநீர் கேட்டு பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேடசந்தூர், 


வேடசந்தூர் அருகே உள்ள பூதிப்புரம், சீத்தப்பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஊருக்கு அருகே உள்ள குளத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டாரில் பழுது ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த பூதிப்புரம், சீத்தப்பட்டி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலிக் குடங்களுடன் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஒன்றிய அதிகாரிகள், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மின்மோட்டார் பழுதை சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story