முகநூல் மூலம் காதல்: சேர்த்து வைக்கக்கோரி காதலன் வீட்டு முன்பு குழந்தையுடன் பெண் தர்ணா


முகநூல் மூலம் காதல்: சேர்த்து வைக்கக்கோரி காதலன் வீட்டு முன்பு குழந்தையுடன் பெண் தர்ணா
x
தினத்தந்தி 21 Aug 2018 4:15 AM IST (Updated: 21 Aug 2018 1:42 AM IST)
t-max-icont-min-icon

முகநூல் மூலம் காதலித்த பெண் தனது காதலனை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி காதலனின் வீட்டு முன்பு குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஜீயபுரம்,

திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள உடையான்குடியை சேர்ந்தவர் சமுத்திரபாண்டியன். இவருடைய மகள் சுபா (வயது 21). திருமணமான இவருக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற இவர் தந்தை வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் முகநூல்(பேஸ்புக்) மூலமாக திருச்சி முத்தரசநல்லூர் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார்(26) என்பவருடன் சுபா நட்பு ரீதியாக பழகி வந்தார். நாளடைவில் அது காதலாக மாறியது. சந்தோஷ்குமார் தற்போது சென்னையில் உள்ள ஒரு கோவிலில் அர்ச்சகராக உள்ளார்.

இந்த நிலையில், சுபாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய சந்தோஷ்குமார் திருநெல்வேலி சென்று அவரை திருச்சிக்கு அழைத்து வந்து ஒரு இடத்தில் தங்க வைத்தார். பின்னர் வெளியில் சென்று வருவதாக கூறிச்சென்ற சந்தோஷ்குமார் அதன்பிறகு திரும்பி வரவில்லை என்று கூறப்படுகிறது. அப்போதுதான் சந்தோஷ்குமாருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடக்க இருக்கும் தகவல் சுபாவுக்கு தெரியவந்தது. தனது காதலனை மீட்டு தரக்கோரி கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சுபா புகார் கொடுத்தார். இந்நிலையில் நேற்று மாலை முத்தரசநல்லூர் பாலாஜி நகரில் உள்ள காதலன் வீட்டின் முன்பு தனது குழந்தையுடன் சுபா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். உடனே, சந்தோஷ்குமாரின் பெற்றோர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஜீயபுரம் போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தனது காதலனை மீட்டு தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கேட்டுக் கொண்டார். அவரிடம், போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

Next Story