விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
கூடலூர் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன.
கூடலூர்,
கூடலூர் அருகே பளியன்குடியிருப்பு, வண்ணாத்திபாறை, மக்கலதேவி பீட், அத்தி ஊத்து, மாவடி, வட்டதொட்டி, எள்கரடு ஆகிய வனப்பகுதிகள் அமைந்துள்ளன. இங்கு மான், யானை, கரடி, காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இதேபோல் அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் ஏராளமாக உள்ளன.
கடந்த சில வாரங்களாக கூடலூர், லோயர்கேம்ப், குமுளி, தேக்கடி ஆகிய பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் கொசுக்களின் தொல்லை அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. கொசுக்களின் பிடியில் இருந்து தப்பிக்கும் வகையில் கூடலூர் அடிவார பகுதிகளுக்கு காட்டு யானைகள் வரத்தொடங்கியுள்ளன.
இதுமட்டுமின்றி அடிவார பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. அங்குள்ள பயிர்களை சேதப்படுத்துகின்றன. கூடலூர் அருகே உள்ள பளியன்குடியிருப்பு பகுதியில் குட்டியுடன் 2 யானைகள் நேற்று சுற்றித்திரிந்தன. அந்த யானைகள், அதே பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பவரின் மாந்தோப்புக்குள் புகுந்தன. கிளைகளை முறிந்து மரங்களை சேதப்படுத்தின.
மேலும் அந்த பகுதியில் உள்ள தோட்டங்களில் இருந்த குடிசைகளை காட்டு யானைகள் சேதப்படுத்தின. யானைகளின் நடமாட்டத்தால் இரவு நேர காவல் பணிக்காக தோட்டங்களுக்கு செல்ல விவசாயிகள் அச்சப்படுகின்றனர். தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள அவரை, மொச்சை காய்களை பறிக்க கூலித்தொழிலாளர்களும் வர மறுக்கின்றனர்.
எனவே விளைநிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூடலூர் பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Related Tags :
Next Story