செங்கல்பட்டு அருகே தனியார் பஸ் டிரைவர்- சுங்கச்சாவடி ஊழியர்கள் மோதல்


செங்கல்பட்டு அருகே தனியார் பஸ் டிரைவர்- சுங்கச்சாவடி ஊழியர்கள் மோதல்
x
தினத்தந்தி 21 Aug 2018 3:45 AM IST (Updated: 21 Aug 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு அருகே தனியார் சொகுசு பஸ் டிரைவருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன்காரணமாக அந்தப் பகுதியில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செங்கல்பட்டு,

மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட தனியார் சொகுசு பஸ் ஒன்று, நேற்று அதிகாலை 5 மணி அளவில் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடிக்கு வந்தது. அந்த பஸ்சை செஞ்சியை சேர்ந்த பிரபு(வயது 40) என்பவர் ஓட்டிவந்தார்.

அந்த பஸ்சை நிறுத்திய சுங்கச்சாவடி ஊழியர்கள், கட்டணம் செலுத்தும்படி கூறினார்கள். அதற்கு பஸ் டிரைவர் பிரபு, “இந்த சுங்கச்சாவடிக்கு உரிமம் முடிந்துவிட்டது. எனவே கட்டணம் செலுத்த முடியாது” என்று சொன்னதாக கூறப்படுகிறது.

இதனால் பஸ் டிரைவருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அந்த சொகுசு பஸ்சுக்கு பின்னால் வந்த பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் நீண்டதூரத்துக்கு அணிவகுத்து நின்று கொண்டிருந்தன.

இந்தநிலையில் டிரைவர் பிரபு, பஸ்சை அங்கிருந்து சிறிதுதூரம் நகர்த்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த 10-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள், சூழ்ந்துகொண்டு பஸ் மீது தாக்குதல் நடத்தி, நிறுத்த முயன்றனர்.

இதனால் தனியார் பஸ் டிரைவர் பிரபுவுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த மற்ற தனியார் பஸ் டிரைவர்கள் அதை கண்டித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதன் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து அடியோடு நின்றது. இதுபற்றி தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு தாலுகா போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று மோதலில் ஈடுபட்ட இருதரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பின்னர் தனியார் பஸ் மீது தாக்குதல் நடத்திய சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதிஅளித்தனர். அதன்பிறகு 6 மணி அளவில் அந்த பஸ் மற்றும் அதைதொடர்ந்து பின்னால் நீண்டவரிசையில் அணிவகுத்து நின்ற வாகனங்களும் அங்கிருந்து புறப்பட்டு சென்றன.

இதனால் செங்கல்பட்டு- சென்னை இடையே 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பயணிகளும் கடும் அவதிக்குள்ளானார்கள்.

Next Story