உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம்
தூத்துக்குடியில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் தலைமையில் நடந்தது.
தூத்துக்குடி,
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடி மாவட்ட கூட்டரங்கத்தில் நேற்று நடந்தது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாலிக் பெரோஸ்கான் கூறியதாவது;-
தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வார்டு மறுவரையரை பணிகள் முடித்து அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. கிராம ஊராட்சி பகுதிகளில் இந்த பணிகளை உடனடியாக முடித்து அனுப்பி வைக்க வேண்டும். மேலும், உள்ளாட்சி தேர்தலுக்கு நகர்புறங்கள் தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளதா? என்பதை தெரிவிக்க வேண்டும். கிராம பகுதியில் தேவையான வாக்குப்பெட்டிகள் உள்ளதா? என்பது குறித்தும் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெரிவிக்க வேண்டும்.
வேட்பாளர்களுக்கு வழங்குவதற்கான கையேடுகள், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு வழங்குவதற்கு தேவையான கையேடுகள் இருப்பில் உள்ளதா? என்பதையும் சரிபார்க்க வேண்டும். தேவையான படிவங்கள் உள்ளதா? என்பதையும் சரிபார்க்க வேண்டும். 2016-ம் ஆண்டில் உள்ளாட்சி தேர்தல் அறிக்கையின் போது வேட்பாளர்களிடம் பெறப்பட்டுள்ள டெபாசிட் தொகையினை முழுமையாக திருப்பி வழங்கிட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மாகின் அபுபக்கர், ஊராட்சிகள் உதவி இயக்குனர் உமாசங்கர், நகராட்சி ஆணையர்கள் அட்சய்யா, பிரேமானந்த், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) பாலசுப்பிரமணியம், செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் நேற்று மாலையில் தூத்துக்குடி யூனியன் அலுவலகம், தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் இருப்பு, தேவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த கணக்கெடுப்பு பணிக்கு கூடுதல் அவகாசம் தேவை. கடந்த முறை உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, வேட்பு மனுதாக்கல் செய்தவர்களின் வைப்புத் தொகையை உடனடியாக திரும்ப ஒப்படைக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது. தற்போது வார்டுகள் பிரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஒப்புதல் கிடைத்த பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறினார்.
கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தின் மாடியில் உள்ள அறையில் பழைய வாக்குச்சாவடி பெட்டிகள், பதிவேடுகள், ஆவணங்கள் உள்ளன. அவற்றை தமிழக தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் நேற்று மாலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சந்திரசேகர் (தேர்தல்), பாலசுப்பிரமணியன் (வளர்ச்சி), யூனியன் ஆணையாளர் கிரி, துணை ஆணையாளர் சிவராமகிருஷ்ணன், மேலாளர் செல்லத்துரை மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story